×

படகுகள் நிறுத்துவதில் தகராறு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

புதுச்சேரி: புதுவை அருகே இரு மீனவ கிராம மக்களிடையே கடற்கரையில் படகுகளை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பெண்கள் உட்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே தந்திராயன்குப்பம் மீனவ கிராமம் உள்ளது. இவர்களது படகுகளை அங்குள்ள கடற்கரை ஓரம் நிறுத்தி வைத்துள்ளனர். பக்கத்து கிராமமான சின்னமுதலியார்சாவடி மீனவர்களும் தந்திராயன்குப்பத்தில் படகுகளை நிறுத்தியுள்ளனர். இதை எதிர்த்து கலெக்டர், மீன்வளத்துறை மற்றும் போலீசாருக்கும் மனு அளித்தனர்.

இதுகுறித்து இரு மீனவ கிராம பிரதிநிதிகளுடன் சமாதான கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தந்திராயன்குப்பம் அம்மன் கோயில் எதிரே திரண்டு, கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். கோட்டக்குப்பம் போலீசார் அவர்களை தடுக்க முயன்றபோது, திடீரென 2 பெண்கள் உள்பட 3 பேர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் தடுத்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து வரும் 4ம் தேதி முதல் சின்னமுதலியார்சாவடியை சேர்ந்த மீனவர்களின் படகுகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post படகுகள் நிறுத்துவதில் தகராறு பெண்கள் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை