×

ஜாதி சான்றிதழ் கோரியவரை அலைய விட்ட டிஆர்ஓவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை:கரூரை சேர்ந்த ஸ்ரேயா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கரூர் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். எனக்கு காட்டு நாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் கோரி, தந்தையின் பள்ளி ஆவணங்கள், தந்தை வழி உறவினருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை இணைத்து அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எனது தந்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக்கூறி மனுவை நிராகரித்து விட்டனர். எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் எனகூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘1977 அரசு அறிவிப்பின்படி ஒருவர் நிரந்தர வசிப்பிடத்திலிருந்து சான்றிதழ்களை விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

இதில் நிரந்தர வசிப்பிடம் என்பது நிரந்தரமாக தங்கி இருக்கும் இடத்தை குறிக்கிறது. சொந்த இடத்தை குறிக்கவில்லை. மனுதாரரின் பெற்றோர் மற்றும் தாத்தா நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனினும், பல ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வசித்து வருவது தெரிய வருகிறது. எனவே டிஆர்ஓ உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என ஜாதி சான்றிதழ் வழங்க பரிசீலனை செய்து, 4 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், தேவையில்லாமல் அலைய விட்டதற்காக, மனுதாரருக்கு டிஆர்ஓ ரூ.50 ஆயிரம் அபராதத்தை 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறலாம்’’ என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

The post ஜாதி சான்றிதழ் கோரியவரை அலைய விட்ட டிஆர்ஓவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : TRO ,ICourt branch ,Madurai ,Shreya ,Karur ,ICourt Madurai Branch ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...