×

சனாதன தர்மத்தில் தீண்டாமை, பாகுபாடு இருப்பதாக அறியாமையில் பேசுகின்றனர்: ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு

சென்னை: சனாதனத்தில் தீண்டாமை, பாகுபாடு இருப்பதாக சிலர் அறியாமையில் பேசுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் மற்றும் பொன்விழாவிற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தினையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர் தலைமை தாங்கினார். திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் ஏ.ஜெ. சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில்: இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பாரதம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால், சனாதனத்தில் தீண்டாமை, பாகுபாடு உள்ளதாக சிலர் அறியாமையில் பேசி வருகின்றனர். சனாதன தர்மத்தில் தீண்டாமை என்பது கிடையாது. பாரதமும், சனாதன தர்மமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதை பிரிக்க முடியாது. பாரதம் உயர்ந்தால் சனாதன தர்மமும் உயரும்.

தாழ்ந்ததால் சனாதன தர்மமும் தாழும். சனாதன தர்மம் என்பது எல்லோரும் சமம் என்பது தான். இதில் வேற்றுமை கிடையாது. மனிதர்கள் நிறத்தில் மாறுபட்டாலும் மனிதர்கள் என்பதை போலத்தான் சனாதன தர்மமும். அதன்படி, பாரதம் வலிமையான நாடாக இருக்க வேண்டும். அதற்காகதான் தயாராகி கொண்டு இருக்கிறோம். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் அதாவது சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இதற்கு மடங்கள், மக்கள் எல்லோரது பங்களிப்பும் வேண்டும். ஆன்மிகத்துடன் சேர்ந்தே பாரதம் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சனாதன தர்மத்தில் தீண்டாமை, பாகுபாடு இருப்பதாக அறியாமையில் பேசுகின்றனர்: ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sanatana ,Governor ,Chennai ,Governor RN Ravi ,
× RELATED ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே...