×

சிங்கப்பூரில் 22 ஆண்டுக்கு பின் தற்கொலைகள் அதிகரிப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்கொலை அதிகரித்து இருப்பது அந்த நாட்டு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரில், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2021ம் ஆண்டில் அங்கு 378 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2022ல் அந்த எண்ணிக்கை 476 ஆக அதிகரித்து உள்ளது. 2000ம் ஆண்டுக்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து இப்போது தான் தற்கொலை விகிதம் இந்த அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதில் மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த பட்டியலில் 10-29 மற்றும் 70-79 வயதுடையோர் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது சிங்கப்பூர் அரசுக்கு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூரில் இதுவரை இல்லாத வகையில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது மனவேதனை அளிக்கிறது என்று மூத்த மனநல மருத்துவரும் மனநல ஆலோசகருமான ஜாரெட் எங் கூறினார். அவர் கூறுகையில்,’ நம் சமூகத்தில், குறிப்பாக நமது இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் ஊடுருவி வரும் காணப்படாத மன உளைச்சலை காட்டுகிறது. சமூக தனிமை மற்றும் தனிமை போன்றவை மன ஆரோக்கியத்தை தொடர்ந்து பெரிதும் பாதிக்கும் அழுத்தமான பிரச்னைகள். இதில் நாம் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

ஏனெனில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 10-29 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் மரணத்திற்கு தற்கொலை முக்கிய காரணமாக உள்ளது. சிங்கப்பூரில் நடக்கும் தற்கொலையில் 10-22 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 33.6 சதவிகிதம் பேர். 2022ம் ஆண்டில் 10-29 வயது வரம்பில் மொத்தம் 125 நபர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இது 2021ம்ஆண்டில் 112 ஆக இருந்தது. 2022ல் இது 11.6 சதவீதம் அதிகமாகும். 70-79 வயதுடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 48 ஆக உயர்ந்துள்ளது. இது 2021ல் 30ல் இருந்து 60 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 7,00,000க்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று உலக சுகாதார மையம் கூறுகிறது.

The post சிங்கப்பூரில் 22 ஆண்டுக்கு பின் தற்கொலைகள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...