×

வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் உலக கோப்பைக்கு தகுதி பெறாத வெ.இண்டீஸ்: ஸ்காட்லாந்திடம் தோல்வியால் வெளியேறியது

ஹராரே: ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறி இருக்கிறது. உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரேவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். ரோமரியோ ஷெப்பர்ட் 36, பூரண் 21 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அபாரமாக விளையாடி 43.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய துவக்க ஆட்டக்காரர் மேத்யூ கிராஸ் 107 பந்தில் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராண்டன் மெக்முல்லன் 106 பந்தில் 69 ரன் எடுத்தார். இந்த தோல்வியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2023 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறியது. ஏற்கனவே 2 போட்டியில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ், எஞ்சிய 2 போட்டியில் வென்றாலும் 4 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். தற்போது இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் 3 போட்டிகளில் 6 புள்ளிகளை பெற்றுள்ளன. சூப்பர் சிக்சில் முதல் 2 அணிகள் மட்டுமே பிரதான சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் சோகத்துடன் வெளியேறி உள்ளது.

இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லாமல் நடக்க உள்ளது. கடந்த 1975 மற்றும் 1979ல் உலக கோப்பையை வென்ற ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸ் 1983 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. சமீபகாலமாக சரிவை நோக்கி செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது கற்பனை செய்ய முடியாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2012 மற்றும் 2016ல் அந்த அணி டி20 உலக கோப்பையை வென்ற போதிலும், ஒருநாள் கிரிக்கெட்டில் படுமோசமான நிலையில் உள்ளது. தற்போது உலக கோப்பைக்கு தகுதி பெறத் தவறியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

The post வரலாற்றில் முதல்முறையாக ஒருநாள் உலக கோப்பைக்கு தகுதி பெறாத வெ.இண்டீஸ்: ஸ்காட்லாந்திடம் தோல்வியால் வெளியேறியது appeared first on Dinakaran.

Tags : West Indies ,ODI World Cup ,Scotland ,Harare ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...