×

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி மும்முரம்: நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு

 

சேலம்: சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை இணைத்து சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை செல்ல சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டிலிருந்து பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டு 2013ம் ஆண்டில் நிறைவு பெற்று சாலை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த தேசிய நெடுஞ்சாலையானது சேலம்-உளுந்தூர்பேட்டை வரை சுமார் 136 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இந்த சாலையானது உடையாப் பட்டியிலிருந்து 7வது மைல் வரை இருவழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாழப்பாடி நகர்புற பகுதியில் முத்தம்பட்டியில் இருந்து மத்தூர் வரை இருவழிச்சாலையாகவும், ஆத்தூர் பகுதியில் செல்லியம்பாளையத்தில் இருந்து துலக்கனூர் வரை இருவழிச்சாலையாகவும் உள்ளது. சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வரையில் 8இடங்களில் இந்த புறவழிச்சாலை, இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலையில் திடீரென வரும் இருவழிச்சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் தொடர்ந்து விபத்துகளும் அரங்கேறி வருகிறது. 44கிலோ மீட்டர் தூரம் கொண்ட இரு வழிபாதையில் 10ஆண்டுகளில் மட்டும் நடந்த விபத்துகளில் 1,075பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கை, கால் ஊனத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற அபாயத்தை கருத்தில் கொண்டு 2ஆண்டுக்கு முன்பு புறவழிச்சாலை பகுதிகளில் பைபர் போன்று பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட குச்சிகளை கொண்டு தடுப்புஅமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஒருபுறமாக வாகனங்கள் அணிவகுத்து சென்றது. இந்தச்சூழல் விபத்துக்களை குறைத்தது. இதற்கிடையில் ஆங்காங்கே தடுப்பு குச்சிகள் உடைந்துள்ளது. அதனை பொருட்படுத்தாமல் சொகுசு கார்கள், அதிவேகத்தில் பறப்பதால் விபத்து அபாயங்கள் தொடர்கிறது.

இந்த நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்தாண்டு, 2023ம் ஆண்டு இறுதிக்குள் இரு வழிச்சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். அவரது அறிவிப்புக்கு பிறகு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.  சாலை அமைக்க மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு இறுதிக்குள் இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி மும்முரம்: நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Salem-Ulundurpet National Highway ,Salem ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை