×

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

வத்திராயிருப்பு: ஆனி மாத பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி ஆனி மாத பிரதோஷம் பவுர்ணமியை முன்னிட்டு, இன்று முதல் 4ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனி பிரதோஷத்தையொட்டி விருதுநகர், சென்னை, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை 2 மணி முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். காலை 6.20 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய சென்றனர். பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு சிலர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் வந்த வாகனங்கள் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் செய்துள்ளனர். பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் காலங்களில் தாணிப்பாறை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : aani ,Saduragiri ,Sunderamakalingam ,Ani ,Madurai District ,Chaptur ,
× RELATED சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு...