×

புளியந்தோப்பில் 10 பேர் கொண்ட கும்பலால் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் சீரழிக்கப்பட்ட கொடூரம்: 8 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். இவர்களது உறவுக்கார பெண் தாம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் தனது 17 வயது தோழியை அழைத்துக்கொண்டு மேற்கண்ட பகுதியில் உள்ள சித்தி வீட்டுக்கு கடந்த 28ம் தேதி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு சிறுமிகள் 3 பேரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது கன்னிகாபுரத்தை சேர்ந்த 18 வயது பெண்ணும் தாம்பரத்தில் இருந்து வந்திருந்த மற்றொரு சிறுமியும் 11 மணி அளவில் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால் கன்னிகாபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுமியின் உறவுக்கார சிறுமி மட்டும் வரவில்லை.

இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் அந்த சிறுமி நடக்க முடியாமல் மிகவும் சோர்வுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது சித்தி, சித்தப்பா ஆகியோர், ‘’இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்’’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி, ‘’ தன்னை 5 பேர் கொண்ட கும்பல் கொடுமைப்படுத்திவிட்டனர்’ என்று தெரிவித்து கதறி அழுது உள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரவு ரோந்து பணியில் இருந்த புளியந்தோப்பு சரக உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியிடம் என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு பின்னர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று மற்ற இரண்டு சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தாம்பரத்தை சேர்ந்த 2 சிறுமிகளும் கன்னிகாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். தினமும் 3 பேரும் சேர்ந்து வெளியே சென்று ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றியதாக தெரிகிறது. நேற்றிரவு 2 சிறுமிகள் மற்றும் 18 வயது இளம் பெண் ஆகியோர் வெளியே சென்றபோது புளியந்தோப்பு கன்னிகாபுரம் வெங்கடேசபுரம் பழைய காலனி பகுதியில் அவர்கள் மூவரையும் ஆண் நண்பர்கள் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கன்னிகாபுரத்தை சேர்ந்த 18 வயது பெண், தாம்பரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மட்டும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

தாம்பரத்தை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுமியை அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பிறகு அந்த சிறுமியை கன்னிகாபுரம் வரை பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதன்பிறகு சிறுமி நடக்க முடியாமல் வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி சித்தி, சித்தப்பாவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று காலை புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் முதல் தெருவை சேர்ந்த பாஸ்கர் (22), தனுஷ் (19), சஞ்சய் (21), முத்துராமன் (21), மற்றும் 18 மற்றும் 16 வயது சிறுவர்கள் என 8 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post புளியந்தோப்பில் 10 பேர் கொண்ட கும்பலால் 2 சிறுமிகள் உட்பட 3 பேர் சீரழிக்கப்பட்ட கொடூரம்: 8 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bliyanthoph ,Perampur ,Pleyanthopu Kannigapuram ,Chennai ,Bliyanthope ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்