×

பணி நீக்கத்தை எதிர்த்து மாஜி பெண் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மதுரை: பணி நீக்கத்தை எதிர்த்து மாஜி பெண் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பேக் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர் அர்ஷத். இவரிடம் கடந்தாண்டு ரூ.10 லட்சம் பணத்தை பறித்ததாக மதுரை நாகமலை இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோர் மீது மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் வசந்தியை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வந்த வசந்தி, வழக்கில் சமாதானமாக செல்வதாகக் கூறி சாட்சிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 31ல் தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் செல்ல இருந்த வசந்தியை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் வசந்தி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்ததை எதிர்த்து வசந்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.விசாரணையின்போது எஸ்பி சிவபிரசாத் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். இதையடுத்து நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது விசாரணை நடந்து வருகிறது. துறைரீதியான நடவடிக்கை எடுத்திடும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

The post பணி நீக்கத்தை எதிர்த்து மாஜி பெண் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sivagangai District ,Ilaiyankudi ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...