×

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு நோயாளிகள் என்னிடம் வந்தனர். ஒருவர் ஐம்பது வயதைக் கடந்த விவசாயி. இன்னொருவர் முப்பது வயது இல்லத்தரசி. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள். கடந்த 10 நாட்களுக்குள்ளாக பார்வைக் குறைபாடு, கண்ணில் வலி, சிவப்பு மற்றும் நீர் வடிதல்.

முதலில் வந்த விவசாயி தொடர்ச்சியாக பீடி புகைப்பவராக இருந்தார். பரிசோதனையில் இருவருக்கும் ஒரு கண்ணின் கிருஷ்ணபடலம் (iris)பகுதியும் அதன் பின்னால் இருக்கும் லென்ஸும் ஒட்டிக் கொண்டிருந்தன. சாம்பல் நிறத்தில் மெல்லிய படலம் (membrane) ஒன்று லென்ஸின் மேல் படர்ந்திருந்தது. கூடுதலாக கிருஷ்ணபடலத்தின் ஓரங்களில் சிறு சிறு உருண்டைகளாக வெள்ளை நிறத்தில் தென்பட்டன. இவை அனைத்தும் கண் அழற்சியின் (acute uveitis/iridocyclitis) ஒரு அறிகுறி.

அழற்சி என்பது பொதுவாக, உடலில் ஏற்படும் திடீர் தொற்று அல்லது மாற்றத்திற்கு எதிராக நம் உடல் தன் எதிர்ப்பாற்றலால் நிகழ்த்தும் எதிர்வினை தான். எனவே அந்த எதிர்வினையைக் குறைக்கும் விதமாக ஸ்டீராய்டு மருந்துகள், கண்ணுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில், கிருஷ்ணபடலத்தை விரிவடையச் செய்யும் மருந்தான mydriatics ஆகியவற்றைக் கொடுத்தேன். நம் நாட்டில் இத்தகைய கண் அழற்சிக்கு மிகமுக்கியக் காரணமாக இருப்பது காசநோய்த் தொற்று. விவசாயி, இல்லத்தரசி ஆகிய இரண்டு நோயாளிகளும் ஒல்லியான உடல் வாகுடன் சற்றே ஊட்டச்சத்து குறைந்தவர்களாக இருந்தார்கள். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இல்லை என்றாலும் அவர்களின் சுற்றுப்புறத்தில் காசநோய் பாதித்தவர்கள் வசிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று தெரிந்தது.

அதனால் இருவருக்கும் ரத்தத்தில் அணுக்களை அளக்கும் complete blood count பரிசோதனையும், தோலில் ஊசி போட்டு காசநோய்க் கிருமிகள் இருக்கிறதா என்று அறிவதற்கான ஒரு பரிசோதனையான Mantoux செய்யச் சொல்லி அனுப்பினேன். இருவரும் பரிசோதனை அறிக்கைகளுடன் வருகையில் சொட்டு மருந்துகள் மற்றும் மாத்திரைகளால் கண்களில் வியக்கத்தக்க மாறுதல்களைப் பார்க்க முடிந்தது. கூடவே நான் சந்தேகித்தபடி இருவருக்கும் காசநோய்த் தொற்று உறுதியானது. பொதுவாக காசநோய்க் கிருமி ஒருவர் உடலில் நுழைந்தால் அவருடைய உடல் அதை எதிர்த்து போரிடவே செய்யும்.

எதிர்ப்பாற்றல் மிகக் குறைந்தவராக இருந்தால் நுரையீரலில் காசநோய் தாக்கி விடக் கூடும். பலருக்குக் காசநோய்க் கிருமிகள் உடலில் பல இடங்களுக்குப் பயணித்து, அங்கு எதிர்வினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதில் ஒன்றுதான் கண்கள். குறிப்பாக உடலில் அதிக ரத்தம் பாயும் பகுதிகளான கிருஷ்ணபடலம் மற்றும் அதனுடன் இணைந்த விழியடிக் கரும்படலம் (choroid) ஆகியவற்றில் காச நோயால் ஏற்படக்கூடிய அழற்சியை அதிகமாகப் பார்க்க முடியும்.

காசநோய் இருக்குமோ என்று சந்தேகித்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு எக்ஸ்ரே, சளி பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்துவார். கூடவே Mantoux தோல் ஊசியைப் போடச் சொல்வார். 48 மணி நேரத்திற்கு பின்பாக தோலில் ஊசி போட்ட இடத்தைப் பரிசோதித்துப் பார்க்கையில் அந்த இடத்தில் வீக்கம் இருந்தால் காச நோய்க்கிருமிகள் உடலில் இருப்பது உறுதியாகிவிடும். மேலே குறிப்பிட்ட முப்பது வயதுப் பெண்ணிற்கு அந்த டெஸ்ட் ஊசியை போட்ட ஒரு சில மணி நேரங்களில் வீக்கம் ஆரம்பித்துவிட்டது. மறுநாள் காலைக்குள்ளாக கை முழுவதும் வீக்கம் பரவி விட்டது. இதனால் அவரது உடலில் காசநோய்க் கிருமிகள் இருப்பது உறுதியானது.

உடனடியாகக் கூட்டு மருந்து சிகிச்சையைத் தொடங்கினோம். அந்த 55 வயது பெரியவருக்கு Mantoux பரிசோதனையில் வீக்கம் இல்லை. ஆனால் ரத்தத்தில் சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும் பரிசோதனையான ESRல் குறிப்பிடத் தகுந்த மாற்றம் இருந்தது. கூடவே எக்ஸ்ரேவிலும் முன்பு டிபி வந்ததற்கான அறிகுறி தெரிந்தது. தொடர்ச்சியாக பீடி புகைப்பவர் என்பதால் தனக்கு வந்த இருமல் புகைப் பிடிப்பதால் ஏற்பட்டது என்று நினைத்து எந்த சிகிச்சையும். எடுக்காமல் விட்டிருக்கிறார். இருவருக்கும் காச நோய்க்கான ஆறு மாத கூட்டு மருந்து சிகிச்சையை தொடங்கினோம். ஏற்கனவே சொட்டு மருந்துகளால் கண்களில் உள்ள பிரச்சனைகள் வெகுவாகக் குறைந்திருந்தன. மருந்துகள் போட போட மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டதால் ஆறு மாதத்திற்கு பின்பாக இருவரது உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம். உடல் எடை கூடி, நன்றாக சாப்பிட முடிகிறது என்று கூறினர்.

சிகிச்சை முடிவுற்ற நிலையில் விவசாயிக்குக் கூடுதலாக ஒரு பிரச்சனை இருந்தது. கண் அழற்சி காரணமாக அவருக்குக் கண்புரை சற்று சீக்கிரமாகவே வளர்ந்து விட்டது. வேறு கண்நோய்களால் வளரும் புரையினை complicated cataract என்போம். புகை பிடிப்பதை நிறுத்தி விடுங்கள். விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். ஆறு மாத கூட்டு மருந்து சிகிச்சை முடிவது வரை அவ்வப்போது சோதனைக்கு வந்தவர் அதன் பின் மொத்தமாக வருவதை நிறுத்திவிட்டார்.

மாறாக அந்தப் பெண்மணி இப்பொழுதும் தொடர் பரிசோதனைக்கு வருகிறார். அவர்களது குடும்பத்தில் ஒரு பெரியவருக்கு தொடர்ச்சியாக இருமல் இருக்க, அவரைப் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் காசநோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பெரியவரும் சிகிச்சை எடுத்தார். முற்றிலும் குணமாகி இப்பொழுது நலமாக இருக்கிறார்கள்.

இன்னொரு பெண்மணி. அவருக்கு மீண்டும் மீண்டும் கண் அழற்சி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. கண்களின் முன்பகுதியை விட பின்பகுதியில் அதிக அறிகுறிகள் (posterior uveitis) தென்பட்டன. தேவையான பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டதில், சிடி ஸ்கேனில் நுரையீரலில் சிறு சிறு கட்டிகள் (granulomas) காணப்பட்டன. இவை அனைத்தும் அதீத எதிர்ப்பாற்றல் காரணமாக வருபவை.

இதே பிரச்சனை இவருக்கு நான்கு வருடங்களுக்கு முன்னால் முன்பும் இருந்து ஏற்கனவே அவருக்கு ஸ்டீராய்டு மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இப்போது காசநோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மாறாக இன்னொரு எதிர்ப்பாற்றல் நோயான Sarcoidosis இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காசநோயைப் போலவே இதிலும் நுரையீரல் முழுவதிலும் சிறு கட்டிகள் தோன்றக்கூடும். கூடவே தோல், கண்கள், எலும்புகள் உள்ளிட்ட பல உறுப்புக்களை பாதிக்கக்கூடிய நோய் இது. அதனால் கண் சிகிச்சையுடன் அதற்கான நிபுணர்களின் கருத்துருவும் பெறப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று நோயாளிகளிலும் கண் அழற்சி அவர்களின் உடலுக்குள் இருக்கும் வேறொரு நோயின் அறிகுறியாக வெளிப்பட்டதைக் கவனிக்கலாம். சில நோயாளிகள் ‘நோய்முதல் நாடி’ என்பதற்கு ஏற்ப மருத்துவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு மூல வியாதிக்கான தொடர் சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். சிலர் ‘எனக்குக் கண்களில் மட்டும் தான் பிரச்சனை. அதை மட்டும் பாருங்கள்’ என்று முதல் முறை வருவதுடன் சிகிச்சையை நிறுத்திக் கொள்வார்கள்.

இத்தகைய கண் அழற்சி பிரச்சனைகளில் முதன்மையாகக் கொடுக்கப்படும் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகளை முதலில் நாளொன்றுக்கு நான்கு அல்லது ஆறு வேளைகள் போட வேண்டியிருக்கும். தொடங்குவோம். பின் அறிகுறிகள் சரியாக, அது படிப்படியாகக் குறைக்கப்படும். வாய் வழியாக உட்கொள்ளப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகளும் அப்படியே.

ஆறு வேளை ஊற்றிய சொட்டு மருந்தை, ஐந்து வேளை, நான்கு வேளை, மூன்று வேளை என்று படிப்படியாகக் குறைக்க சொல்லி அறிவுறுத்துவோம். ஒருவேளை அழற்சி குறையவில்லை என்றால் அதே ஆறு வேளையில் இன்னும் சில நாட்கள் தொடரலாம். சில நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளை விட அதிக வலிமை மிகுந்த, எதிர்பாற்றலைக் குறைக்கும் immunosuppresants மருந்துகள் தேவை. இவற்றிற்கு பிற பக்க விளைவுகள் அதிகம் என்பதால் அவற்றையும் கவனிக்க வேண்டும். அதனால் தொடர் பரிசோதனை தேவை. முதல் முறை மருத்துவரிடம் வருவதுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு அழற்சி அதிகரித்து கண்களின் பிரச்சனைகள் தீவிரம் அடைகின்றன. கூடவே அழற்சிக்குக் காரணமான முதன்மை நோய் உடலின் பிற பகுதிகளில் ஆதிக்கத்தை செலுத்தி உடல்நிலையை இன்னும் மோசமாக்கி விடக் கூடும். முற்றிலும் குணமடைவது தாமதமாகலாம் அல்லது முடியாமலும் போகலாம்.

சில புற்று நோய்கள், மருந்துகள், மரபணு சார்ந்த நோய்கள் இவையும் கண் அழற்சியை உருவாக்கக்கூடும். கண்புரை அறுவைசிகிச்சையின் போது பொருத்தப்படும் லென்ஸ்களில் சில வகைகள், அந்த செயற்கை லென்ஸ்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் preservative மருந்துகளும் கூட கண்ணழற்சியை உருவாக்குவதைப் பார்த்திருக்கிறோம். இவை மிக லேசான அழற்சியை உருவாக்குவதால் பெரும்பாலும் மருந்து மாத்திரைகள் மூலமாக அதை சீர் செய்து விட முடியும். அறுவை சிகிச்சை முடித்தவுடன் அளிக்கப்படும் ஸ்டீராய்டு சொட்டு மருந்துகள் செயற்கை லென்ஸால் ஏற்படக்கூடிய மிதமான அழற்சியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துகின்றன.

சென்ற வாரம் ஒரு நோயாளியை சந்தித்தேன். பத்து நாட்களுக்கு முன்பாக குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து வலை (mesh) பொருத்தப் பட்டிருந்த அவருக்கு ஒரு கண்ணில் கண் அழற்சி ஏற்பட்டிருந்தது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை ஆராய்ந்த போது, உடலில் ஒரு இடத்தில் polypropylene‌ஆல் ஆன வலையைப் பொருத்தும் போது, உடல் முழுவதும் அதீத எதிர்பாற்றலைக் குறிக்கும் வகையிலான Cytokines, Interleukins வெளியாகலாம் என்று கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ‘‘கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடுமா சார்?” என்ற கேள்வி வந்தால்” ஓடினாலும் ஓடும் போல!” என்று சொல்லத் தோன்றியது!

The post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே! appeared first on Dinakaran.

Tags : Akilanda Bharti ,Dinakaran ,
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!