×

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இது ஒரு திரைப்படப் பாடல். மூச்சு என்பது மூன்றெழுத்து. உயிர் என்பது மூன்று எழுத்து. உடல் என்பது மூன்றெழுத்து. ஆன்மா என்பது மூன்றெழுத்து. உலகு என்பது மூன்றெழுத்து. இந்த மூன்றெழுத்தின் பெருமை அவ்வளவு எளிதாகச் சொல்லி விட முடியாது.ஆன்மிகத்திலும் ஜோதிடத்திலும் வாழ்வியலிலும் இந்த மூன்றெழுத்து பல்வேறு விதமான பரிணாமங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வேதம் சொல்லும் போது நிறைவாக ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி என்று மூன்று முறை சொல்வது வழக்கம். எதையும் மூன்று முறை சொல்லிவிட்டால் அது சத்தியமாகிவிடும் என்பது சாத்திர நம்பிக்கை. இதை ஒட்டியே நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழிப் பாடலில்

பொலிக பொலிக பொலிக! போயிற்று
வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழிதரக் கண்டோம்

– என்று தொடங்கின் போதே “பொலிக பொலிக பொலிக!’’ மூன்று முறை சொன்னார்.

இந்திய சமய தத்துவங்களின் முதன்மையான மூன்று தத்துவங்கள் அத்வைதம், விஷிஷ்டாத்வைதம், துவைதம். இதை ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வாத்சாரியார் பரப்பி புகழ் பெற்றனர். சைவ சமயத்தில் முப்பொருள் உண்மை என்று பதி, பசு, பாசத்தைச் சொல்லுவார்கள். பதி என்கிற இறைவனையும், பாசம் என்கிற தளையையும் (பந்தம், கட்டு), பசு என்கிற ஜீவாத்மாவையும் அவர்கள் சொல்வது வழக்கம். இதே விஷயத்தை வைணவத்தில் “தத்துவ திரையம்” என்று வேறு விதமாகச் சொல்லுவார்கள். அதில் இறைவனை ஈஸ்வரனாகவும், ஜீவாத்மாவை சித்தத்துவமாகவும், ஜடப்பொருள்களை அசித் தத்துவமாகவும் இணைத்து சிதசித் ஈஸ்வர தத்துவத்தை முப்பெரும் உண்மையாகச் சொல்வார்கள்.வைணவத்தில் பெருமாளுக்கு முப்பெரும் தேவியர்கள்.

‘‘கூந்தல் மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
குலஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை”

– என்று முப்பெரும் தேவியரை நம்மாழ்வார் பாடுகிறார். இந்த மூவருக்குமே வேத மந்திரங்கள் இருக்கின்றன. முதல் ஸ்ரீதேவி (திருமகள்), அவளுக்கு ஸ்ரீசூக்த மந்திரம் இருக்கிறது. அடுத்த தேவி பூமாதேவி. பூமகள். அவளுக்கு பூசூக்தம் இருக்கிறது. மூன்றாவதாக ஆயர் மடமடந்தை என்று ஆழ்வார்களால் சொல்லப்பட்ட நீளாதேவி. இவளுக்கும் நீளா சூக்தம் என்கிற மந்திரம் இருக்கிறது. பொதுவாக முப்பெரும் தெய்வங்கள் (சிவன், அயன், மால்) என்று மூன்று தெய்வங்களைச் சொல்லி அவர்களுக்கு மனைவியாக மலைமகள் (பார்வதி) கலைமகள் (சரஸ்வதி) அலைமகள் (மஹாலஷ்மி) என்று சொல்வதும் உண்டு.

நாம் எதையும் சிந்திக்கிறோம். சிந்திப் பதற்கு கருவியாக உள்ளது மனம். அது மூன்று எழுத்து. சிந்திப்பது சரிதானா என்று ஆராய்வது அறிவு. அந்த அறிவு மூன்றெழுத்து. பகுத்தறிந்து மெய்ப்பொருளைப் பார்ப்பதற்கு துணை நிற்பது அறிவுக்கு மேலான ஞானம். அது மூன்றெழுத்து. உலகங்களையும் மூன்றாகச் சொல்லுகின்றார்கள். கீழ் உலகங்களான பாதாள உலகம், நடு உலகங்களான பூமி போன்ற உலகங்கள், மேல் உலகங்களான தேவர் உலகங்கள். “மூவுலகும் திரிந்தோடி வித்தகனே ராமா ஓ நின் அபயம்” என்ற பாசுரத்தின் மூலமாக ஜெயந்தன் என்ற காக்கை அசுரன் தனக்கு அடைக்கலம் கேட்டு மூன்று உலகங்களையும் தேடிச் சென்றான் என்பதிலிருந்து இதனை தெரிந்துகொள்ளலாம்.

உலகியல் வாழ்க்கையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவன் பிறக்கிறான். பிறந்து வளர்ந்து கல்வி என்ற மூன்றெழுத்து பெற்று, தேர்வு என்ற மூன்றெழுத்து எழுதி,பதவி என்ற மூன்றெழுத்தை அடைந்து, அல்லது தொழில் என்ற மூன்றெழுத்தைச் செய்து பணம் என்ற மூன்றெழுத்தைச் சம்பாதிக்கிறான். எதையும் விலை கொடுத்து வாங்க பணம் என்கிற மூன்றெழுத்து உதவுகிறது. சம்பாதிக்கும்போது வரவு என்ற மூன்றெழுத்தாகும். கையை விட்டுப் போகும்போது செலவு என்ற மூன்றெழுத்தாகிப் போகிறது.

இந்த வரவும் செலவும் சமம் என்கின்ற மூன்றெழுத்தில் இல்லாவிட்டால் கடன் என்ற மூன்றெழுத்து வந்துவிடுகிறது. அந்த கடன் தலைக்கு மேல் ஏறினால் அது மனிதனின் மானம் என்கின்ற மூன்றெழுத்தை பதம் பார்த்துவிடுகிறது.பிறகு அவனுக்கு வாழ்வு என்ற மூன்றெழுத்து அமைய மனைவி என்கின்ற மூன்றெழுத்தை அடைய காதல் என்ற மூன்றெழுத்தின் மூலமோ பெரியோர்கள் பார்த்தோ மணம் என்கின்ற மூன்றெழுத்தை செய்துகொள்கின்றான். சந்தான விருத்திக்காக பிள்ளை என்கின்ற மூன்றெழுத்தைப் பெற்றுக்கொள்ளுகிறான். அன்பு என்ற மூன்றெழுத்துக்காக அலைகிறான். பிறருக்கு உதவி என்ற மூன்றெழுத்து செய்தால் புகழ் என்ற மூன்றெழுத்து கிடைக்கிறது. இல்லை பாவமென்ற மூன்றெழுத்து சேர்ந்து தாழ்வு என்ற மூன்றெழுத்து கிடைக்கிறது.

ஓடி ஆடி உழைத்து சலித்து இறுதியில் ஆயுள் என்ற மூன்றெழுத்து முடிந்து அவன் அடைகின்ற நிலை மரணம். அப்பொழுது அவனுக்கு பெயர் பிணம் என்கின்ற மூன்றெழுத்து. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவன் குறள் என்ற மூன்றெழுத்துடைய திருக்குறளைப் படிக்க வேண்டும்.குறளில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. அறம், பொருள், இன்பம் என்பது மூன்று அறங்களாகச் சொல்வார்கள். அதை ஒட்டிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன.

சாஸ்திரங்களை படிக்க வேண்டும் என்று சொன்னால் வேதம் என்கின்ற மூன்றெழுத்தைப் படிக்க வேண்டும். அதில் பிரணவம் உண்டு. அதை அட்சரத்திரையம் என்றும் மூன்று அட்சரங்களாச் சொல்வார்கள். அகாரம் என்கின்ற ஈஸ்வரன், மகாரம் என்கின்ற ஜீவாத்மா, உகாரம் என்கின்ற குரு அல்லது உலகு. (அ, உ, ம சேர்ந்தது ஓம்) எண்களில் சிறப்புக்குரிய எண் மூன்று. இதை குருவுக்குரிய எண் என்கிறது எண் கணிதம். சாஸ்திர ஞானம் விவேகம், பக்தி, பணிவு, அடக்கம் என்று சொல்லப்படும் தூய தன்மைகள் அனைத்தும் குருவின் அனுக் கிரகம்தான். மனதால், நோக்கால், தீண்டலால் என மூன்று தீட்சைகள்.

மொழிகளிலே சிறந்த மொழி தமிழ் மொழி. அது மூன்றெழுத்து. தமிழை முத்தமிழ் என்பார்கள். இயல், இசை நாடகம். தமிழ் என்பதே கூட வல்லினம் மெல்லினம் இடையினம் என்பதன் கூட்டமைப்பாய் உருவானதுதானே? தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதர் என சங்கீத மும்மூர்த்திகளைச் சொல்வது போலவே, முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை என. தமிழ் மூவரைச் சொல்வார்கள். ஒருவன் வாழ்ந்து சம்பாதிக்கக் கூடிய வினைகளை மூன்று வினை களாக நம்முடைய சாத்திரங்கள் சொல்லுகின்றன. பழவினை, நுகர்வினை அல்லது நிகழ்வினை எதிர்வினை. இதனை சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்று சொல்வார்கள்.

பழங்களில் மூன்று பழங்கள் சிறப்பாக முக்கனிகள் என்று சொல்லப்படுகின்றன. (மா, பலா, வாழை). சிவபெருமான் முப்புரங்களை எரித்தார். பொன் வெள்ளி இரும்பாலான கோட்டைகள் என மூன்று திரிபுரங்கள். திரிவேணி சங்கமம் என்ற வடமொழி சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள். அலகாபாத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆறும் வந்து கலப்பதாக நம்பிக்கை. இங்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும்.

மனிதனுக்கு மனிதன் குணம் மாறும். இவை அனைத்தும் சாத்வீகம், ரஜோ, தாமச குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும். சாத்வீக குணம் மனிதனுக்கு ஞான ஒளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கும். ரஜோ குணம் ஆசை பற்று முதலிய குணங்களை அளித்து கர்மங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. தாமச குணம் மயக்கம் சோம்பல் உறக்கம் முதலியவற்றை ஏற்படச் செய்கிறது.

வாதம் பித்தம் கபம் என முப்பிணிகள்.குலச் செருக்கு, கல்விச் செருக்கு செல்வச் செருக்கு என மூன்று செருக்குகள். மனிதன் காமம், வெகுளி, மயக்கம் எனும் முக்குற்றம் இன்றி இருக்க வேண்டும். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற முச்சக்திகளைச் சொல்வார்கள். சூரியன், சந்திரன், அக்கினி என்ற முச்சுடர்கள் இவ்வுலகைக் காக்கின்றன. ஆக்கல், காத்தல், அழித்தல் முத்தொழில்கள் உண்டு. நூல்களில் முதல் நூல், வழி நூல், சார்பு நூல் என முந்நூல்கள் உண்டு. சரீரம் மூன்று வகை ஸ்தூலம், சூட்சுமம், அதி சூட்சுமம். சூட்சம சரீரம் இது கனவு காணும் சரீரம்.

இதற்கு எந்த பாரமும் இல்லை. ஸ்தூல சூட்சும உடம்பு உருவாவதற்குக் காரணம் காரண உடம்பேயாகும். சூட்சும உடல் ஸ்தூல உடலை இயக்குகிறது. கனவில் ஸ்தூல உடலின் துணை சூட்சும உடலுக்குத் தேவையில்லை. தமிழகத்தை சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்கள் ஆண்டனர். ஆணவம், கன்மம், மாயை மும்மலங்கள் நீங்கினால் ஆன்மா இறைவனை உணரும். அவனை பக்தி செய்யும்போது எண்ணம், சொல், செயல் எனும் திரிகரண சுத்தியோடு செய்ய வேண்டும்.

இதையே ஆண்டாள்…

(தூயோமாய் வாந்தி தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்று திருப்பாவையில் பாடி இருக்கிறாள். இன்னும் சில மூன்றெழுத்துக்களைப் பார்ப்போம்.

1. கடவுளின் நிலை மூன்று – அருவம், உருவம், அருவுருவம்.

2. ஆசைகள் மூன்று – மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.

3. குணம், மனம், தினம், கணம், வரும், தரும், சினம், அமைதி, அன்னை, தந்தை, தம்பி, தங்கை, மாமன், கனவு, நினைவு, கதிர், பயிர், காலம், கோலம், என மூன்றெழுத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு சொல்லும் உரைக்கும்.

4. அருள் – மூன்றெழுத்து. அதைப் பெற என்ன செய்ய வேண்டும்?

இறைவனின் அருளைப்பெறச் சுலபமான வழி பக்தி. பக்தியின் உன்னத நிலை சரணாகதி. உடல் பொருள் ஆவி இவை மூன்றையும் ஈசுவரனுக்கே அர்ப்பணித்துவிடுவதுதான் சரணாகதியின் தன்மையாகும். இதனையே மாணிக்கவாசகப் பெருமான்,

அன்றே என்றன் ஆவியும் உடலும்
உடைமையும் எல்லாம்
குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குமுண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
என்று சிவபெருமான் தன்னை ஆட்கொண்டு அருளிய விதத்தைக் கூறுகிறார்.

குலசேகர ஆழ்வாரும்…

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப் பொழில்சூழ் வித்துவக் கோட்டம்மானே
அரிசினத்தா லீன்ற தாயகற்றிடினும் மற்றவள்தன்
அருள் நினைந்தே யழுங்குழவி யதுவே போன்றிருந்தேனே

– என்று, சினத்தால் ஒரு தாய் தன் குழந்தையை விட்டுவிட்டாலும், அந்தக் குழந்தை தாயின் அன்புக்காக ஏங்கி அழுவது போன்று தன்னைத் துயரம் வந்துற்றபோதும், தான் அந்தப் பெருமாளின் அருளையே வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்.இப்படி மூன்றெழுத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்து நான்கெழுத்தைப் பற்றிச் சிந்திப்போம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் appeared first on Dinakaran.

Tags : Saffron ,
× RELATED மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்!