×

சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்: வேல்ஸ் பல்கலைக்கழக விழாவில் ஒன்றிய நிதி அமைச்சர் பேச்சு

பல்லாவரம்: பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு, 75 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களையும், 169 மாணவர்களுக்கு பிஎச்டி பட்டங்களையும் வழங்கி கவுரவித்தார். மொத்தம் 4305 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து, பிற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான பட்டங்களை ஆர்.எம்.கே.கல்வி குழும தலைவர் முனிரத்தினம், ப்ரஸ் ஒர்க் நிறுவன உரிமையாளர் கிரிஷ் மாத்ரு பூதம், கோவையில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் ராமலிங்கம், இந்திய தடகள கூட்டமைப்பின் துணை தலைவரும் இந்திய தடகள வீராங்கனையுமான அஞ்சுபாபி ஜார்ஜ் ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “இந்த சமூகத்திற்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியா கல்வியில் எப்படிப்பட்ட முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த 2014ம் ஆண்டிற்கு முன்பு வரை நமது நாட்டில் மொத்தம் 720 பல்கலைக்கழகங்கள் இருந்தன. ஆனால், தற்போது 1113 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று கடந்த 2014ம் ஆண்டிற்கு முன்பு வரை 51,348 மெடிக்கல் சீட்டுகள் இருந்தன. ஆனால் இன்று அவை 99,763 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த துறையில் பட்டம் பெற்றாலும், கல்வி தகுதியின் அடிப்படையில் வெளிநாடுகளில் உறுதியாக வேலைவாய்ப்பு பெற முடிகிறது.

உலகளவில் ஆன்ட்ராய்டு போன் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தையும், இன்டர்நெட் உபயோகப்படுத்துவதில் 2ம் இடத்தையும் பெற்று வருகிறது. 2025ம் ஆண்டு இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தன்னிகரற்று திகழும். 2024ம் ஆண்டுக்குள் இந்தியா அமெரிக்காவின் டெக்சாஸில் பயிற்சி எடுத்து கொண்டு விண்வெளிக்கு போகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில்தான் தற்போது பிரதமர் மோடி கையெழுத்திட்டு வந்துள்ளார். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் தலைமையகத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் எப்4141 ரக இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார். விழாவில், இணைவேந்தர்கள் ஜோதிமுருகன், ஆர்த்தி, துணை தலைவர் ப்ரீத்தா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

The post சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்: வேல்ஸ் பல்கலைக்கழக விழாவில் ஒன்றிய நிதி அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Finance Minister ,University of Wales Festival ,Pallavaram ,graduation ceremony ,University of Wales ,Chanderer Isari Ganesh ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...