×

தகுதியுடையவருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டியது

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 51

(பகவத்கீதை உரை)

நம்மால் காண இயலவில்லை என்பதால் ஒரு பொருள் இல்லாததாகிவிட முடியுமா? நம் அறிவுக்கு எட்டவில்லை என்பதால் ஓர் உண்மை இல்லையென்றாகிவிட முடியுமா? இரவில் நம்மால் சூரியனைப் பார்க்க முடியவில்லை என்பதால் சூரியனே இல்லை என்று வாதிட முடியுமா? அது உலகின் இன்னொரு பகுதிக்கு ஒளி வழங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை? காற்று நமக்குக் காட்சியளிக்கிறதா? அதனாலேயே அது இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஒரு செடியின் அசையாத இலையும், நம் மேனியால் உணரப்படாத சில்லிப்பும் காற்று இல்லை என்று மறுக்க முடியுமா? காற்றசைவினால் ஏற்படக்கூடிய சலனம், ஓசை இல்லாவிட்டாலும் அங்கே காற்று இருக்கத்தான் செய்கிறது! அது மௌனக் காற்று. எந்தச் சிறு சலசலப்பு விளம்பரமும் செய்துகொள்ளாமல் நமக்கு ஆக்ஸிஜன் தருவதாகிய தன் கடமையை அது ஆற்றுகிறது.

அப்படிப்பட்டதுதான் யோகம் என்ற சத்தியமும். அது ஆரவாரமாகவும் அனுசரிக்கப்படலாம்; அமைதியாகவும் உணரப்படலாம். இந்த யோகத்தைதான், தான் சூரியனுக்கு சொன்னதாகச் சொல்கிறார் கிருஷ்ணன். தான் அப்படி சூரியனுக்குச் சொன்னதை இப்போது அர்ஜுனனுக்குச் சொல்கிறார்.

‘ஸ ஏவாயம் மயா தேத்ய யோக ப்ரோக்த புராதன
பக்தோஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேத துத்தமம்’ (4:3)

‘‘நான் உனக்கு விவரித்துச் சொன்ன யோகம் என்ற சத்தியம் மிகவும் தொன்மையானது. எனது பக்தனாக, அதைவிட என் நண்பனாக நீ விளங்குவதாலேயே உனக்கு நான் இதைச் சொன்னேன். இது மிகவும் மேன்மையானது. உயர்வானது. ரகசியமானது.’’

என்றும், எங்கும், எப்போதும் நிலைத்திருப்பது இந்த யோகம் என்ற சத்தியம். இதிலிருந்து முரண்படுவதில் மனித மனதுக்கு ஒரு சுவாரஸ்யம் கிடைக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு மனித மனக்கோணலுக்கேற்ப அசத்தியம் உருவாயிற்று. நீதிக்கு எதிராக அநீதி, தர்மத்துக்கு எதிராக அதர்மம், நியாயத்துக்கு எதிராக அநியாயம்… ஆனால் சத்தியம் அப்பழுக்கற்றது. யாராலும், எதனாலும், எப்படியும் மாசுபடுத்த முடியாதது.

சரி, இந்த யோகம் – சத்தியம் – ரகசியமாக இருப்பானேன்? இங்கே ரகசியம் எனப்படுவதன் ரகசியப் பொருள் என்ன தெரியுமா? அது தகுதியுடையவரால் மட்டுமே தெரிந்து கொள்ளப்பட வேண்டியது என்பதாகும்! அப்படித் தகுதி இல்லாதவர்களே நிறைந்திருந்ததால்தான் இக்ஷ்வாகு மன்னனுக்குப் பிறகு இந்த யோகம் யாராலும் உரைக்கப்படவில்லை போலிருக்கிறது! இந்த யோகம் உரைக்கப் பட, கேட்டவர்கள் தாங்கள் அதை யாருக்குச் சொல்கிறார்களோ அவர்கள் அதற்குத் தகுதியானவராக இருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். பெரும்பாலும் அப்படி யாரும் அமையாததால் அதனைத் தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு ரகசியம் காத்திருக்கிறார்கள்.

அந்தத் தகுதியை யார் நிர்ணயிப்பது? அதற்கு என்ன அளவுகோல்? யோகத்தைப் பற்றித் தெரிந்தவர்களால், அதைக் கேட்கக்கூடியவரின் தகுதியைச் சரியாக அனுமானிக்க முடியும்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அப்படித் தகுதியுடையவர் யாரும் இல்லாததால் வெகுபல ஆண்டுகளாக, யுகங்களாக யோகம் போதிக்கப்படாமலேயே இருந்திருக்கலாம். அன்று யோகத்தை முதன் முதலாக சூரியனுக்கு உபதேசித்த கிருஷ்ணனே, இப்போது, அதை மறுபடியும் உபதேசிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அப்படி உபதேசம் பெறக்கூடிய அர்ஜுனன், அதற்குத் தகுதியானவன் என்று பகவானே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

உண்மையில் எந்த உபதேசத்தையும் கேட்பதற்கு அடிப்படைத் தகுதி எது? ஆர்வம்தான்! ‘இதனால் நமக்கு என்ன பயன் விளையும்?’ என்ற எதிர்பார்த்தலுக்கு உட்படாத ஆர்வம். அதில் ஏதோ புனிதம் இருக்கிறது, வாழ்வின் ஒழுக்கநெறி இருக்கிறது, இதை நாம் பயின்று, நம் வாழ்க்கையைத் திருத்திக்கொண்டு, பிறகு முடிந்தால் நம்மைப் போன்றே இதுபற்றி நம்மிடம் கேட்க வருபவருக்கு உபதேசிக்கலாம்; அவர்கள் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று தீர்மானிக்கும் ஆர்வம். சுயநல சுகத்தையும் விஞ்சிய பொதுநலச் சேவை! திருக்கோஷ்டியூர் நம்பிகள் தமக்குக் கற்பித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஸ்ரீராமானுஜர், கோயில் கோபுரத்தின் மேலேறி நின்று ஊர் மக்களுக்கெல்லாம் உபதேசித்தாரே அந்த மக்களுடைய தகுதியை அவர் எப்படி நிர்ணயித்தார்?

திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்துகொண்டிருந்த புரட்சித்துறவி ராமானுஜர், நம்பிகளிடமிருந்து உபதேசம் பெற பெரிதும் துன்பப்பட வேண்டியிருந்தது. ஆமாம், அவ்வளவு சுலபத்தில் அவருக்கு ஆசானிடமிருந்து மந்திரோபதேசம் கிடைத்து விடவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு ராமானுஜரும் சளைக்காமல் பதினேழு முறை நடந்து, நடந்து சென்று முயற்சிக்கவும் தயங்கவில்லை. ஆனால், இப்படி அலைக்கழிக்கப்பட்டதிலும் ராமானுஜரைப் பொறுத்தவரை ஓர் எதிர்காலப் பலன் என்ற அனுபவம் கிட்டியிருக்கிறது.

வழியில் தன்னைக் காணும் தாழ்குல மக்கள் பலர் கைகட்டி, வாய்பொத்தி, சற்று விலகிப்போய் அவருக்கு வழிவிட்டு ‘ஒதுங்கும்’ தன்மை கண்டு மனம் வெதும்பியிருப்பார். நம்மைப்போல இவர்களும் மனிதர்கள்தானே, இப்படி இவர்கள் ஒதுங்கிப்போய், நம்மை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று குமுறியிருப்பார். இப்படி மரியாதை, தாழ்வு மனப்பான்மை அல்லது பயம் காரணமாக ஒதுங்கிச்செல்லும் மனிதர்கள் தன் நடைவழியில் மட்டுமல்லாமல், இந்த பாரத தேசமெங்கும் பரவியிருக்கவேண்டும் என்றே அவர் கருதியிருக்கக்கூடும். ‘நாராயணன் படைப்பில் இப்படி ஒரு பேதமா, மனிதர்களாக வகுத்துக்கொண்ட இந்த ஏற்றத்தாழ்வு தவறாயிற்றே’ என்று கருதியிருப்பார். இவருடைய இந்த எண்ணத்தை மேன்மேலும் வலியுறுத்தவும், வலுப்படுத்தவும்தான் திருக்கோஷ்டி நம்பியும் அவரைப் பதினேழு முறை அலைக்கழித்தார் போலிருக்கிறது!

பதினெட்டாம் முயற்சியில் குருவின் திரு வருள் கிட்டியது. அப்போதும் நம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். ‘தன் உடலை வருத்திக்கொண்டு, மனதை உறுதியாக்கிக்கொண்டு, இத்தனை முயற்சி செய்து இவன் மந்திரோபதேசம் பெற வருகிறானென்றால், இதில் ஏதோ சுயநலம் இருக்க வேண்டும். அந்த மந்திரத்தின் பலனை ஏதேனும் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறானோ’ என்றும் யோசித்தார் நம்பிகள். அதனாலேயே, ராமானுஜருக்கு உபதேசம் அளித்த பிறகு, ‘‘இந்த உபதேசம் உனக்கு, உனக்கே உனக்கு மட்டும்தான். யாருடனும் நீ இதனைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. இதன் மகோன்னதம் தகுதியற்றவர்களைச் சென்றடைந்துவிடக் கூடாது.

ஆனால், என்னுடைய இந்த உத்தரவையும் மீறி, நீ இந்த வாய்ப்பினை துஷ்பிரயோகம் செய்தாயானால், உனக்கு மறுமையில் நரகவாசம்தான்’’ என்று பயமுறுத்தி வைத்தார். இந்த பயமுறுத்தலுக்குப் பின்னாலும் ஓர் ஆசார்ய தந்திரம் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. வெறுமே மந்திரோபதேசம் மட்டும் பெறுவது ராமானுஜரின் நோக்கமாக இருக்காது; பதினேழு முறை புறக்கணிக்கப்பட்டு அவமானமடைந்தாலும் மீண்டும் வந்து உபதேசம் அளிக்குமாறு இறைஞ்சும் இந்த மனோதிடம், வேறு எதையோ திட்டமிட்டிருக்கிறது என்று நம்பிகள் உணர்ந்திருப்பார்.

அதனை அனுமானிக்க முடியாத சாமானியர் அல்லவே அவர்? அதனாலேயே ராமானு ஜரின் அந்தத் திட்டம் நிறைவேறட்டும் என்று கருதியே ‘பயமுறுத்தி’யிருக்கிறார். அப்படி பயமுறுத்தினாலோ, எச்சரித்தாலோ, ராமானுஜரின் உள்ளத்தில் தான் தீர்மானித்திருக்கும் வைராக்கியம் மேலும் உறுதிப்படலாம் என்றும் அந்த ஆசார்யன் கருதியிருப்பார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் தனித்தனியே ரகசியம் பாராட்டிக்கொண்டாலும், இருவருக்குமான ‘பொதுநோக்கு’ ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும்.

ஒற்றை மனிதராக ராமானுஜர் அந்த மந்திரோபதேசத்தைப் பெற்று, பிறகு தான் ஒருவரைத் தேர்ந் தெடுத்து அவருக்கு உபதேசித்து, அவர் மூலமாக அவருக்கு அடுத்தவருக்கு என்று சராசரியாக ஒரு பரம்பரைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அந்த உபதேசத்தை வழிமொழிவது என்ற வாழையடி வாழை கருத்தை, கொள்கையை நம்பிக் கொண்டிருந்தார், நம்பி. ஆனால் ராமானுஜரோ மரம் ஒன்றானாலும், விழுதுகள் ஆயிரம் என்ற ஆலமரக் கருத்து, கொள்கையைக் கொண்டிருந்தார்.

அதனால்தான் குரு ‘கடுமையாகவே‘ எச்சரித்திருந்தாலும் ஒரு தனிமனிதரை இழப்பதால் பல்லாயிர மக்கள் நலம்பெற முடியுமானால், அந்த மனிதர் தானாகவே இருக்கட்டும் என்று உறுதி பூண்டிருந்தார், ராமானுஜர். நிதானமாக குருவின் உபதேசத்தைச் செவிமடுத்தார்.மந்திரத்தையும் அதன் பொருளையும் ஆத்மார்த்தமாக உள்வாங்கிக்கொண்டார். இதயக் கோயிலில் திருமாலை இருத்தி, அந்த மந்திரத்தால் பல நூறுமுறை அர்ச்சித்தார். பிறகு திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தின் மீது ஏறினார்.

அங்கிருந்தபடியே ஊர்மக்களை எல்லாம் அழைத்தார். கோபுர உச்சியிலிருந்து ராமானுஜர் கூவி அழைப்பதை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே உடனேயே கூடிவிட்டார்கள். தினமும் திருவரங்கத்திலிருந்து நம்பிகளை தரிசிக்க வந்த அவரது சீடரல்லவா இவர் என்று வியப்புடன் பார்த்தார்கள். திடீரென்று இவருக்கு என்ன குறை? எதற்காக கோபுரத்தின் உச்சிக்குச் சென்று இரு கரங்களையும் விரித்துப் பரப்பி ஏதோ கூற முயற்சி செய்ய வேண்டும்?

குழுமிவிட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனை. சிலர் குருவுடன் பிரச்னையோ, அதனால் ராமானுஜர் ஏதேனும் விபரீத முடிவெடுக்கிறாரோ என்று வேதனைக் குழப்பம் கொண்டார்கள். வேறு சிலர் தினமும் நம்மையெல்லாம் பாசக் கண்களால் பார்த்தபடி நம் மனநோயைப் போக்கிய இந்தப் பெருமான், நம்மை சாதி, குலம் பார்க் காமல் நெருங்கி வந்து கருணை செய்த இந்த மகான், என்ன செய்யப் போகிறாரோ என்று தவிப்புடன் காத்திருந்தார்கள்.

மேலிருந்து அவர்களையெல்லாம் அன்புடன் பார்த்து புன்னகைத்தார் ராமானுஜர். ‘இத்தனை பேரும் உய்வடையப் போகிறார்கள். குருநாதர் நம்பிகளின் கருணையே கருணை’ என்று மனம் விம்மினார். கண்களை மூடி சில நொடிகள் தியானத்தில் ஆழ்ந்தார். கீழே கூடியிருக்கும் பாமரர்கள் அனைவரும் அன்பு மயமானவர்கள், பக்தி வயப்பட்டவர்கள். இவர்கள் அனைவருமே பரமாத்மாவின் பேரருளை ஸ்வீகரிக்கத் தகுதியானவர்கள்தான் என்று நிறைவு கொண்டார். உடனே, ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாக்ஷர மந்திரம் பூத்தூவலாக விழுந்தது. ஒரு துளி பட்டவுடன் சிலிர்த்துக்கொண்ட மக்கள், அதுவே மழையாகப் பொழிந்தபோது அப்படியே பரவசமாயினர்.

மந்திரத்தையும் அதன் பொருளையும் நன்கு கேட்ட அவர்கள், அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி தங்களுக்குள் ஓர் உயர்வை வளர்த்துக் கொண்டனர். ‘நமக்கும் இறையருள் உண்டு’ என்ற நம்பிக்கை அவர்களுக்குள் துளிர்த்தது. இருகரம் கூப்பி மேலே நின்றுகொண்டிருந்த ராமானுஜரைத் தொழுதார்கள். (திருக்கோஷ்டி நம்பிகளிடம் ராமானுஜர் கற்றது சரம ஸ்லோகமும் அதன் பொருளும்தான் என்றும் சொல்லப்படுகிறது. எதுவானாலும், தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு தெய்வ மந்திர விளக்கம் அனுக்ரகமாகக் கிடைக்கிறது என்பதுதானே உண்மை.)

எதிர்பார்த்ததுபோல நம்பி ‘போலி’யாக வெகுண்டார். ‘‘என் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிட்டாய். உனக்கு நரகம்தான்’’ என்று சபிப்பது போல ‘நடித்தார்’. இப்படிச் சொன்னதன் மூலம், ராமானுஜருக்குத் தான் தனிச்சலுகை எதுவும் அளிக்கவில்லை என்று தன்னுடன் இருந்த பிற சீடர்களுக்கு ‘ஆறுதலும்’ அளித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே உணர்ச்சிவசப்பட்டவராக, ‘‘நீர்தான் எம்பெருமானாரோ!’’ என்று கூறி ராமானுஜரை ஆரத் தழுவிக்கொண்டார். அப்போதே மானசீகமாக அவர் நாராயணனிடம் வேண்டிக் கொண்டிருந்திருப்பார்: ‘பகவானே, இந்தப் பிள்ளைக்கு தீர்க்காயுசு கொடு.’

இதனால்தான் ‘நரகம்தான்’ என்று சபிக்கப்பட்ட ராமானுஜரால், ஒரு முழு மனித ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்ந்து சமூகத்துக்கும் இறைவனுக்கும் தன் நிறைவுநாள்வரை உழைக்க முடிந்திருக்கிறது! இந்தப் பெருமை ஸ்ரீராமானுஜருக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த மனிதப் பிறவியும் இப்படி முழு வாழ்க்கையை, உலகத்தின் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்!

ஆக, கிருஷ்ணனின் வழியைப் பின்பற்றி, ராமானுஜரும் தகுதிவாய்ந்தவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு மந்திரோபதேசம் செய்திருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ளலாம். இப்படியாக சத்தியம் என்ற யோகம் அந்தந்த காலகட்டத்தின் தேவையைப் பொறுத்து பரந்தாமனால் நியமிக்கப்பட்டவர்களால், தகுதியானவர்களுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது என்றும் அனுமானிக்கலாம்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post தகுதியுடையவருக்கு மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டியது appeared first on Dinakaran.

Tags :
× RELATED அறிவா? உணர்ச்சியா? எது தீர்மானிக்கிறது?