×

திருமயம் பகுதியில் பைபாஸ் சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்

*எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை

திருமயம் : தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவது ஒரு காரணமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள், அதிகாரிகள் அலட்சியம் முக்கியமானதாக உள்ளது. ஒரு வாகனத்தை சாலையில் இயக்க வாகன ஓட்டியிடம் ஓட்டுனர் உரிமம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வாகனத்தின் செயல்பாடுகள், வாகனம் சாலையில் செய்வதற்கான உரிமம், வாகனத்தில் உள்ள சமிக்கைகள் முக்கியமானதாக உள்ளது.

வாகனம் ஓட்டுபவர் சரியாக இருந்தாலும் வானத்திலுள்ள சமைக்கைகள் சரியாக செயல்படாமல் இருந்தால் இந்த வாகனத்தை பின் தொடரும் வாகனம் எளிதில் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தான் ஒவ்வொரு கனரக வாகனங்களும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு கொடுக்கப்பட்டு அதற்காக தனி அலுவலகம் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு சாலையில் வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து எந்த அதிகாரிகளும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

இது போன்ற சிறிய தவறுகள் பெரிய விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் திருமயம் பகுதியில் சாலையோரம் பழுதாகி நிற்கும் வாகனத்தின் செயல்பாடுகள் காட்டுகிறது.உதாரணத்திற்கு கனரக வாகனங்கள் திருமயம் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக பழுதாகி நடுவழியில் நிற்கிறது. வாகனம் சாலையில் ஓடும் போது பழுதாவது இயல்பானதாக இருந்தாலும் அப்போது அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுனர் இரவாக இருந்தாலும், பகலாக இருந்தாலும் சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் வாகனம் பழுதடைந்த இடத்திலேயே நிறுத்தி விடுகின்றனர்.

அதேசமயம் பழுதடைந்த வாகனம் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ள போது அந்த வழியில் வரும் மற்ற வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்கும் வாகனத்தை அறியும் வகையில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை சமிக்கைகளும் அந்த பகுதியில் வைப்பதில்லை. மேலும் பழுதடைந்து நிற்கும் வாகனத்தை ஓட்டிவந்த வாகன ஓட்டிகள் சாலையில் வரும் மற்ற வாகனங்களை எச்சரிக்கும் வகையில் மரக்கிளைகள், கற்கள், பழைய டயர்களை நடுவழியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாலையின் குறுக்கே போட்டு எச்சரிக்கை செய்கின்றன. இதுபோன்ற சாலை விதிமீறல்கள் கூடுதல் விபத்துகள் ஏற்படுத்த வழி வகை செய்கிறது. ஆனால் இது பற்றி சம்பந்தப்பட்ட எந்த ஒரு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இதனால் பைபாஸ் சாலையில் அஜாக்கிரதையாக வரும் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்கும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட வழி வகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாகனத்தை இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் எவ்வளவு முக்கியமோ அதேபோல எதிர்பாராதவிதமாக நடுவழியில் பழுதாகி நிற்கும் வாகனம் மற்ற வாகனங்களை எச்சரிக்கும் வகையில் முக்கோண வடிவ சமிக்கைகள் வாகன ஓட்டிகள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருமயம் பகுதியில் பைபாஸ் சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Tirumayam ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டை, திருமயத்தில் தமிழ்நாடு...