×

அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைத்து அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த 27ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் மருத்துவக் கல்வி இயக்ககம், 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

அதில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேருபவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 73ம், பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 73ம், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13 ஆயிரத்து 610, பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11 ஆயிரத்து 610 கட்டணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் ரூ.53 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இவர்களுக்கான கட்டணமும் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஓராண்டுக்கு கட்டணமாக பெறப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டைவிட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக” தெரிவித்தனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சிய இடங்கள் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தைச் சேந்தவர்களை வைத்து நிரப்பி கொள்ளலாம். அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்பதால் அந்த இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் நிரப்பி கொள்ளும்.

The post அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைத்து அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MPPS ,BTS ,Chennai ,Tamil Nadu ,BTS Medical Study ,Colleges ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?