×

நிலத்தை மீட்டு தரக்கோரி நடத்திய போராட்டங்கள் வீண் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு கார் டிரைவர் தற்கொலை

*சேத்துப்பட்டு அருகே பரபரப்பு

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அருகே 2 சென்ட் நிலத்தை மீட்டு தரக்கோரி பல்வேறு போராட்டம் நடத்திய கார் டிரைவர், அதற்கு தீர்வு கிடைக்காததால் வேதனையடைந்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அண்ணா தெருவை சேர்ந்தவர் காந்தன் மகன் மணிகண்டன்(37), கார் டிரைவர். இவருக்கு சொந்தமாக 62 சென்ட் நிலம் இருந்துள்ளது.

இதில், விற்றதுபோக மீதமிருந்த இடத்தில் 2 சென்ட் நிலம் குறைவாக உள்ளது எனவும், அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த திருமண மண்டப உரிமையாளர் ஆக்கிரமித்து கொண்டதாகவும் கூறி வந்துள்ளார். இதுகுறித்து சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், தனது இடத்தை அளந்து தருமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வட்டார சர்வேயரிடம் மனு கொடுத்துள்ளார். அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் மணிகண்டனுக்கு சொந்தமான நிலத்தை அளந்தனர்.

இதில் 2 சென்ட் நிலம் குறையவில்லை என தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு மணிகண்டன் மறுப்பு தெரிவித்து நிலத்தை மீண்டும் அளக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். கலெக்டர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்துள்ளார்.மேலும், ஏற்கனவே தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்வதாக போராட்டம், தீக்குளிப்பு முயற்சி, குடும்பத்துடன் உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி தலைமை நிலஅளவர் முன்னிலையில் அவரது நிலம் அளக்கப்பட்டது. அதிலும், அவருக்கு சொந்தமான நிலம் எதுவும் குறையவில்லை என தெரிவித்துள்ளனர்.ஆனாலும், மணிகண்டன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மணிகண்டனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மனஉளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன், `நான் அளித்த புகார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதும், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், மணிகண்டன் குடும்பத்தினர் திருவண்ணாமலை எஸ்பியை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இதில் மணிகண்டன் தற்கொலை செய்வதற்கு காரணமாக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட டிரைவர் மணிகண்டனுக்கு மனைவி மற்றும் 3 வயதில் குழந்தை உள்ளது. டிரைவர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிலத்தை மீட்டு தரக்கோரி நடத்திய போராட்டங்கள் வீண் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு கார் டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dakkori ,Chetteputtu ,Tarakori ,
× RELATED மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிறோம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்