×

புதுக்கோட்டையில் அரசு பஸ் ஜப்தி விவகாரம் உதவி மேலாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் போக்குவரத்து கழக உதவி மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உயிரிழந்த சரவணனின் மனைவி ராதிகா உள்ளிட்ட அவரது குடும்பத்திற்கு ரூ.27 லட்சத்து 68 ஆயிரத்து 847 இழப்பீட்டை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2022ம் ஆண்டு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டில் முறையிட்டனர். இதனால் ஒரு அரசு பேருந்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 27ம் தேதி கோர்ட் பணியாளர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நின்ற ஒரு அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முறையாக பணி செய்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்காத புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து கழக (மோட்டார் வாகன விபத்துகள் மனு) உதவி மேலாளர் கலைவாணனை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவிட்டார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுக்கோட்டையில் அரசு பஸ் ஜப்தி விவகாரம் உதவி மேலாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Government Bus Jafti Affairs ,Pudukkotte ,Pudukkotta ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...