×

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி துவக்கம் 2 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் ஏற்பாடு

 

ராமநாதபுரம், ஜூலை 1: ரூ.20 கோடி மதிப்பில் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகள் துவங்கியதால், 2 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மையப்பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள், கடைகள் மற்றும் வளாக பகுதியிலுள்ள சந்தைக்கடை ஆகியவை சேதமடைந்து காணப்பட்டது. திமுக அரசு வந்ததும் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகளுக்கு அரசானை வெளியிடப்பட்டு, முதற்கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைகள், சந்தைகடைகள், அடிப்படை வசதிகள் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் சேதமடைந்த பழைய கட்டிடங்கள், 50க்கும் மேற்பட்ட கடைகள், சந்தைகடை கட்டிடங்கள், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளை அகற்றும் பணி உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது. இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர போக்குவரத்து ஏற்பாடு செய்யும்படி கலெக்டர் விஷ்ணுசந்திரன், எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து நகராட்சி சார்பில் தற்போது ரயில்வே நிலையம் அருகிலுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மதுரை ரோட்டில் உள்ள மூலக்கொத்தலம் பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ்கள் வந்து செல்ல மற்றும் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி துவக்கம் 2 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’