வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தபோது பெற்றோர் கண் முன் சிறுமி மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள புல்லூர் அடுத்த பெரும்பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் உள்ள கனகநாச்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவேல்(38) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, கோயில் அருகில் உள்ள தடுப்பணையில் முத்துவேல், அவருடைய 8 வயது மகளான பத்மாஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக நீராடியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பத்மாஜா நீரின் வேகத்தினால் ஆழமான பகுதிக்கு இழுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பத்மாஜா அலறியபடி நீரில் மூழ்கியுள்ளார். பத்மாஜாவின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறிது நேர தேடுதலுக்கு பின் மயங்கிய நிலையில் அவரை மீட்டனர். பின்னர் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பத்மாஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த திம்மம்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து, ஆந்திர மாநிலம் குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடுப்பணையில் குளித்த சிறுமி பெற்றோர் கண் முன் மூழ்கி பலி வாணியம்பாடி அருகே சோகம் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள appeared first on Dinakaran.

