×

சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களின் இயற்கை சந்தை: நுங்கம்பாக்கத்தில் 2 நாட்கள் நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களின் இயற்கை சந்தை இன்றும் நாளையும் சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் மாத முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை நடத்தப்பட உள்ளது. அதன்படி இம்மாதம் இன்றும், நாளையும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.

இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், சந்தையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவையும் தரமும் நிறைந்த உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை சந்தைக்கு வந்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழலாம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களின் இயற்கை சந்தை: நுங்கம்பாக்கத்தில் 2 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : SHGs ,Nungambakkam ,Chennai ,Tamil Nadu Women's Development Corporation ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கம் தனியார்...