×

குழந்தையை தத்தெடுப்பதற்காக போராட்டம் விண்ணப்ப நிராகரிப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர உத்தரவு

சென்னை: குழந்தையை தத்தெடுக்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தாக்கல் செய்த மனுவுக்கு, ஒன்றிய அரசு பதிலளிக்க மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் குடியேற்றத் துறை அதிகாரியாக பணிபுரியும் திருநங்கை பிரித்திகா யாஷினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து டெல்லியில் உள்ள ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்காத நிலையில் திருநங்கை என்ற காரணத்தை கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து எனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி ஒன்றிய அரசும், ஒன்றிய தத்தெடுப்பு ஆணையமும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் பதிலளிக்க மேலும் அவகாசம் வேண்டுமென்று ஒன்றிய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் அளிக்க மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை ஜூலை 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

The post குழந்தையை தத்தெடுப்பதற்காக போராட்டம் விண்ணப்ப நிராகரிப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union govt ,Chennai ,Prithika Yashini ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...