×

தெளிவு பெறு ஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அறுபதாம் கல்யாணம் செய்துகொள்கின்றார்களே, அதில் என்ன விசேஷம்?
– மோனிஷா, மதுரை.

பதில்: அறுபதாம் கல்யாணம், 70-ஆம் கல்யாணம் என்றெல்லாம் இல்லை. ஒரு மனிதன் ஒரு கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதே கடினமாக இருக்கும் பொழுது, அறுபதாம் கல்யாணம், 65-ஆம் கல்யாணம் என்றெல்லாம் எப்படிச் செய்துகொள்வது? ஒரு மனிதனுக்கு 60 வயது நிறைகின்ற பொழுது எல்லா கோள்களும் அவர் ஜனன ஜாதக நிலையை ஒத்திருக்கும் என்பதால், அதை ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடுகிறார்கள். தமிழ் ஆண்டின் ஒரு பரிணயம், அதாவது ஒரு சுற்று முடிந்து விட்டது என்பதைக் கொண்டாடுகிறார்கள்.

அதற்காக சிறப்பான ஹோமங்கள் வழிபாடுகள் நடத்துகின்றார்கள். உலகியலுக்காக அன்றைய தினம் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு, தாங்கள் பார்க்காத திருமண வைபவத்தை மறுபடியும் செய்து பார்க்கிறார்கள்.இதனை வடமொழியில் `சஷ்டி அப்த பூர்த்தி’ என்கின்றோம். உதக சாந்தி, மிருத்யஞ்சன ஹோமம் போன்ற வைதிகச் சடங்குகள் செய்கின்றோம்.

60 கலசங்களில் புனித நீர் சேகரித்து மந்திரம் ஓதி அபிஷேகம் செய்கின்றோம். 60 வயது ஜாதகங்களை பூரண ஆயுள் ஜாதகங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.
ஒரு நண்பர் கேட்டார்.‘‘சரி இந்த விழாவின் முக்கியத்துவம் என்ன?’’ அடியேன் சொன்னேன்.

‘‘எளிமையாகச் சொல்வதானால் நினைத்துப் பார்ப்பதுதான்’’ அவர் கேட்டார்.

‘‘என்ன நினைத்துப் பார்க்க வேண்டும்?’’

‘‘60 வயது முடிந்து 61-ல் நுழைப்பவர்கள், 60 வயது வரை, தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும்’’ என்றேன்.

‘‘அது சரி, அவர்களிடம் ஆசி பெறுகிறார்களே அவர்கள் என்ன நினைத்துப் பார்க்க வேண்டும்?’’ என்றார். ‘‘அவர்களிடம் ஆசிபெறும் இளையோர்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். சரியாக வாழ்ந்து இருந்தால் அதைப் பின்பற்றலாம். தவறாக வாழ்ந்திருந்தால் அவரைப் பின்பற்றாமல் இருக்கலாம்.’’

? மனிதன் என்பதற்கு என்ன பொருள்?
– வசந்த், நாகை.

பதில்: மனம் உள்ளவன் சக மனிதர்களிடம் கொள்வதே. மனிதாபிமானம் என்று சொன்னாலும், மன் என்ற சொல்லிலிருந்து மனிதன் என்ற சொல் வந்ததினால், உலக உயிர்களிடம் எல்லாம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே மனிதனுடைய இயல்பாக இருக்க வேண்டும்.

அதனால்தான் வள்ளல் பெருமான் ‘‘அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும், ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்’’ என்று கேட்டார். காரணம், மற்ற எல்லா உயிர்களும் மனிதனுக்கு உதவி செய்து வாழ்கின்றன. ஒரு பசுவால் மனிதனுக்கு எத்தனையோ உதவிகள் உண்டு. ஒரு எருமையால் உதவி உண்டு. ஒரு யானையால் உதவி உண்டு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், மனிதனால் மற்ற எந்த உயிருக்கும் பெரிய அளவில் உதவி இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மரம் வைத்தால்கூட, அந்த மரத்தில் கனி பறித்து சாப்பிடுவதற்காகவே சுயநலத்தோடு வைப்பது மனிதனுடைய இயல்பாக இருக்கின்றது.

இந்த இயல்பு மாற வேண்டும். மனிதாபி மானம் அதாவது பிற உயிர்களிடத்திலே இரக்கம் கொள்ளல்தான் மனிதர்களின் உண்மையான குணம். அப்படி இருந்தால்தான் அவர்கள் மனிதர்கள். அந்தக் காலத்தில் ஒரு ஞானி திண்ணையில் உட்கார்ந்து கொள்வாராம். போகிற வருபவர்களைச் சுட்டிக்காட்டி ‘‘நாய் போகிறது பார், நரி போகிறது பார்’’ என்பாராம். வள்ளல் பெருமான் போகும்போது மட்டும், ‘‘மனிதன் போகிறான் பாருங்கள்’’ என்பாராம்.

?நம் இயல்பு எப்படி இருக்கிறது? எப்படி இருக்க வேண்டும்?
– பாரதி, விருதுநகர்.

பதில்: மருத்துவரிடம் போகிறோம். ஆபரேஷனுக்கு மூன்று லட்சம் செல வாகும் என்கிறார். இப்பொழுதெல்லாம் இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம். நாம் பேரம் பேசாமல் கொடுக்கிறோம். கடன் வாங்கியாவது கொடுக்கிறோம். இது அதிகம் என்று அவரிடம் வாக்குவாதம் செய்வதில்லை. மருந்துக் கடைக்காரர் 9000 ரூபாய் என்று பில் போடுகிறார்.

மறு பேச்சு பேசாமல் கொடுக்கிறோம். இது அதிகம் என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்வதில்லை. பையனுக்கு ஸ்கூல் பீஸ் லட்ச ரூபாய் என்கிறார்கள். ஆஹா… என்று கட்டுகின்றோம்.
ஆனால், வீட்டுக்கு வந்த கீரைக்காரக் கிழவி ஒரு கட்டு இருபது ரூபாய் என்று சொன்னால், ‘‘ஏன் கிழவி, இப்படி அநியாயத்துக்கு கொள்ளை அடிக்கிறாய்?” என்று கேட்கிறோம். நம் இயல்பு இப்படித்தான் இருக்கிறது.

? விலை உயர்ந்த செல்வம் எது?
– சுந்தரம், பிச்சாண்டார் கோயில்.

பதில்: உலகில் விலை உயர்ந்த செல்வமும் அருமையான பாதுகாப்பும், மனதைத் தெளிவாக்கி உடலை வலுவாக்கும் மருந்தும், தலை சிறந்த ஆயுதமும் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் பயன்படுத்துவதில்லை. உலகின் விலை உயர்ந்த செல்வம் ஞானம் (நல்லறிவு, மெய்யறிவு) அருமையான பாதுகாப்பு – நம்பிக்கை; மனத் துயரை அகற்றும் மருந்து – சிரிப்பு; தலை சிறந்த ஆயுதம் – பொறுமை.

? நம் துன்பங்களை நாம் பெரிதுபடுத்தலாமா?
– வள்ளி, ஈரோடு.

பதில்: முக்கால்வாசிப் பேர் பெரிதுபடுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். ஒருவர் தனது துன்பங்களைச் சொல்லி அழுது கொண்டே இருந்தார். ‘‘என் கஷ்டம் உங்களுக்கு தெரியாது’’ என்றார். ‘‘என்னைப் போல் துன்பப் படுபவர்கள் போல் இந்த உலகத்திலேயே இல்லை’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவரிடம் ஆழ்ந்த ஒரு விசாரணை நடத்தினார் ஒரு பெரியவர். அவருடைய துன்பத்திற்கான காரணங்களைப் பட்டியலிட்டபோது, அது அல்பமானதாகவும் சிறியதாகவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான காரணங்கள் பல அவரிடம் இருந்தன. ஆனால் அவர் மகிழ்ச்சியோடு இல்லை. இன்னொருவர் வந்தார். அவர் எப்பொழுதும் சந்தோஷத்தோடு இருந்தார்.

மகிழ்ச்சியோடு பேசுவார். சிரித்துக் கொண்டே இருப்பார். ‘‘என்ன சார் குறை? ஒரு குறையுமில்லே.” என்பார். ‘‘ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்கேன்” என்பார். விசாரித்ததில் பல துன்பங்களைத் தாங்கிக் கொண்டு அவர் வாழ்ந்து வருவது தெரிந்தது. அவர் துன்பப்பட்டு அழுவதற்கு பல காரணங்கள் இருந்தன. அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். இதைச் சொல்லி பெரியவர் சிரித்துக் கொண்டே சொன்னார். ‘‘இதுதான் உலக இயற்கை. சிரிக்க வேண்டியவன் அழுகிறான். அழ வேண்டியவன் சிரிக்கிறான்’’.

?ஜோதிடம் மனிதனுக்கு – வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது?
– கண்ணன், செங்கல்பட்டு.

பதில்: ஜோதிடம் பற்றிய ஒரு விவாதம் வந்தது. ஜோதிடம் பார்ப்பது வீண் என்றார் ஒருவர். ஜோதிடம் பார்ப்பதால் மனக்குழப்பம்தான் வரும் என்றார் இன்னொருவர். ஒருவர், “சில ஆண்டுகளுக்கு முன் என் ஜாதகம் பார்த்த ஒரு ஜோசியர் ஓஹோ என்று பல முன்னேற்றம் நடக்கும் என்று அடித்துச் சொன்னார். ஒன்றும் நடக்கவில்லை. என்றார். அப்போது ஜோதிடத்தில் சிறந்த அறிஞர் – அதன் ஏற்ற இறக்கங்களை அறிந்த ஒருவர் சொன்னார்.

‘‘ஜோதிடம் நமக்கு பல உண்மைகளைச் சொல்கிறது’’
‘‘என்ன உண்மைகளைச் சொல்கிறது?’’
‘‘ஜோதிடத்தில், அதாவது ஜாதகத்தின் 12 கட்டங்களும் பல்வேறு விஷயங்களைச் சொல்கின்றன. குடும்பம், செல்வம், கல்வி, உத்தியோகம், மனைவி என்று’’
‘‘சரி’’“நான் கேட்கிறேன், எல்லாவற்றிலும் நிறைவடைந்த பாக்கியத்தோடு ஒரு ஜாதகர் இந்த உலகத்தில் இருக்கிறாரா என்றால் இல்லையே’’. “அது இருந்தால் இது இல்லை. இது இருந்தால் அது இல்லை என்கின்ற கதைதானே. 12 கட்டங்கள் அனைத்தும் நன்மை தருவதாகவே எந்த ஜாதகத்திலும் இருக்காது. ஜோதிடக் கட்டம் சொல்லும் உண்மை இதுதான். இதை மட்டும் உணர்ந்தால் போதும். மனிதனுடைய வாழ்க்கை சிறப்பாகும். கடவுள் எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்துவிடுவதில்லை. யாருக்கும் எதுவும் கொடுக்காமல் இருந்து விடுவதுமில்லை.’’

? பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்?
– சிந்துஜா, பெங்களூர்

பதில்: ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருமுறை விவேகானந்தர் கேட்டார். ‘‘பணம்தான் இங்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. நீங்கள்தான் தெய்வத்துடன் (காளியுடன்) நேரில் பேசுவீர்கள் என்று சொல்கிறார்களே. நீங்கள் தெய்வத்திடம் கேட்கக் கூடாதா?’’‘‘ஒன்று செய் நரேந்திர, நீ போய் முதலில் கேள், பிறகு நான் போய்க் கேட்கிறேன்?’’ விவேகானந்தர் மறுநாள் வந்தார். மௌனமாக நின்றார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கேட்டார்.

‘‘என்ன நரேன், கேட்டாயா?’’
‘‘இல்லை’’
‘‘ஏன்?’’

‘‘தெய்வத்தின் முன்னால் நின்று பிரார்த்தனை செய்யும்போது எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. அதுதான்…’’
‘‘எனக்கும் அதுதான் பிரச்னை, போய் வா’’ என்றார். மணிவாசகரிடம் இறைவனே, “உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாராம்’’. மணிவாசகர் பதிலுக்குக் கேட்டாராம்.
“எனக்கு என்ன வேண்டும் என்று அறியாதவனா நீ? என்னிடமே கேட்கிறாய்’’:

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
– குழைத்தபத்து, திருவாசகம். இந்தப் பாட்டைப் படியுங்கள். பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும், என்ன கேட்கவேண்டும் என்பது புரியும்.

? இன்றைக்கு உலகம் எங்கே போகிறது?
– திப்பு, ஓசூர்

பதில்:இனங்களில் மிருகமும் குணங்களில் மனிதமும் அழிக்கப்படுகிறது தினமும் என்பதுதான் இன்றைய உலகத்தின் போக்கு. இயற்கையோடு ஒன்றி வாழாதது மட்டுமல்ல, எதிர்த்து வாழத் துடிக்கும் விஞ்ஞானம், இயற்கையோடு ஒன்றி வாழும் மெய்ஞானத்தை தினம் தோறும் அழித்துக் கொண்டிருக்கிறது. அப்படி அழிப்பதால் வரும் விளைவுகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

? மனிதனின் பண்பு எப்படி இருக்கிறது?
– சங்கவி, வேலூர்.

பதில்: தன் காரில் விழுந்த சிறு கீறலுக்காக வருந்தும் அளவிற்குகூட, பிற மனிதர்களின் மனதில் தன்னால் ஏற்பட்ட கீறலுக்காக மனிதன் வருந்துவதில்லை. அத்தகைய பண்பாடுதான் இன்றைக்கு இருக்கிறது.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறு ஓம் appeared first on Dinakaran.

Tags : Kunkumam ,Monisha ,Madurai ,Kallyana ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி