×

அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்:ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருப்பழனம், திருவையாறு அருகில், தஞ்சாவூர் மாவட்டம்.

காலம்: முதலாம்ஆதித்த சோழன் (பொ.ஆ.871-907)

திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் – மே மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் `சப்தஸ்தான திருவிழா’ நடைபெறும் ஏழு கோயில்களில் இத்திருக்கோயில் இரண்டாவது தலமாகும்.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த பழமையான சோழர்கால சிவாலயத்தின் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர், இறைவி பெரியநாயகி.

‘மேவித்து நின்று விளைந்தன
வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன
அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி
வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி
யேனைக் குறிக்கொள்வதே.’
– நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர்
‘பழனம் பழனமே யென்பீ ராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே’

சிவபெருமான் விரும்பி உறையும் பழனம் பழனம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின், பன்னாள் செய்து போந்த பழைய வினையாகிய நோயை நீக்கலும் கைகூடும் என்று அப்பர் தனித்திருந்தாண்டகத்தில் இத்தலம் பற்றி அருளியுள்ளார். பழனத்தில் சிறுவனை ஆபத்திலிருந்து மீட்டதால் இவ்விறைவன் “ஆபத்சகாயேஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார். குபேரன், திருமால், திருமகள், சந்திரன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம். கஜ சம்ஹார மூர்த்தி, சுகாசன மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் போன்ற சிறப்பான சிவவடிவ கோஷ்டச்சிற்பங்கள், கர்ணகூட்டில் அழகுப்பெண் சிற்பங்கள், வாராஹி, மகேஸ்வரி, கௌமாரி போன்றோரின் செழுமையான சிற்பங்கள் நிறைந்து விளங்கும் இவ்வாலயத்தை ஒரு கலைக்கருவூலம் என்றே கூறலாம்.

அழகிய கற்றளியாகக் கலைநுணுக்கம் மிகுந்து திராவிட பாணி விமானத்துடன் அமைந்துள்ள இவ்வாலயத்தில், கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) இல்லாதது குறிப்பிடத்தக்கது. 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், பின்னர் முதலாம் பராந்தக சோழன், விஜயநகர நாயக்க மன்னர்கள் மற்றும் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் அளித்த பங்களிப்புகளினால் பெரும் விரிவாக்கங்கள் செய்யப்பட்டுள்ளதை தற்போதைய ஆலயக் கட்டமைப்பில் காணலாம். பல்வேறு சோழமன்னர்களின் நிலநிவந்தங்கள், ஆலயத் திருப்பணி குறித்த தகவல்கள் தெரிவிக்கும் ஏராளமான கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் உள்ளன.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post அழகிய சிற்பங்கள் நிறைந்த ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் appeared first on Dinakaran.

Tags : Apadsakayeswarar ,Temple ,Kumkum Spiritual Sculpture and Excellence Temple ,Apadsakayeswarar Temple ,Thirupazanam ,Tiruvaiyaru, Thanjavur District ,Chola ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள...