×

குஜராத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!: வெள்ளத்தில் மிதக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்கள்.. மழைநீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்..!!

காந்திநகர்: குஜராத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக ஜுனாகத் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வரும் நிலையில், ஜுனாகத் நகரில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை மேகவெடிப்பு போல் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் மழைநீரில் மிதந்தன. 2 மணி நேரத்தில் 11.8 சென்டி மீட்டர் மழை பதிவானதால் ஜுனாகத் நகர், நவ்சாரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின.

பல இடங்களை 6 அடிக்கும் மேல் மழைநீர் வியாபித்ததால் கார்களை மூழ்கடித்து வெள்ளம் ஓடியது. ஓசட் ஆற்றின் கரையின் ஒரு பகுதி உடைந்ததால் பாமனசாகட் பகுதியில் ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தாமோதர் ஆற்றிலும் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு பாய்கிறது. சில இடங்களில் பாலங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன. கட்ச் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை ஆபத்தான முறையில் பொக்லைன் மூலம் மக்கள் கடந்து செல்லும் காட்சி இணையத்தில் பகிரப்படுகிறது.

ஜம்கான் ஜோர்னா என்ற கிராமம் பிற கிராமங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ள பாதிப்பால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post குஜராத்தில் கொட்டித் தீர்த்த கனமழை!: வெள்ளத்தில் மிதக்கும் நூற்றுக்கணக்கான கிராமங்கள்.. மழைநீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Gandhinagar ,Junagadh Nagar ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் கோத்ரா மையத்தில்...