×

குழந்தை தத்தெடுப்பு மனு: திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்..!!

சென்னை: குழந்தையை தத்தெடுக்க அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருநங்கை பிரித்திகா தாக்கல் செய்த வழக்கில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு மேலும் 2 வாரம் ஐகோர்ட் அவகாசம் அளித்தது. சென்னையில் குடியேற்றத்துறை அதிகாரியாக பணிபுரிபவர் தான் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர் ஏற்கனவே தமிழக காவல்துறையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தவர். தற்போது குடியேற்றத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

மனுவில் பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தேன். ஆனால் திருநங்கை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்கவில்லை என்றும் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க கூடியவராக இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

தான் அரசு பணியில் உள்ளதால் குழந்தையை சிறந்த முறையில் வளர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த முறை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஜூன் 30ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு ஆணையத்திற்கும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அச்சமயம் ஒன்றிய அரசும், ஒன்றிய தத்தெடுப்பு வள ஆணையமும் பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் அளித்த நிலையில் மேலும் 2 வாரம் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post குழந்தை தத்தெடுப்பு மனு: திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Union Government ,Prithika Yashini ,CHENNAI ,Dinakaran ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து