×

உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

*மருத்துவக்குழுவினர் அறிக்கை

மேட்டுப்பாளையம் : உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காட்டு யானை பாகுபலி வாயில் காயத்துடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து விஜய், வசீம் என்ற இரு கும்கி யானைகளும், கோவை சாடிவயல் முகாமிலிருந்து பைரவா, வளவன் என்ற இரு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக வனத்துறையினர், வன கால்நடை மருத்துவ குழுவினர் பாகுபலி யானையினை தீவிரமாக கண்காணித்தனர்.

தற்போது காயமடைந்த யானை நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வாழை, பாக்கு, கூந்தப்பனை, மாங்காய், மூங்கில், சீங்கைக்கொடி, மரப்பட்டைகள், பலா மற்றும் புல் பூண்டுகளை நல்ல முறையில் கடித்து சாப்பிடுவதும், தண்ணீர் நல்ல முறையில் குடிப்பதும், யானையின் சாணம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வாயிலிருந்து வரும் உமிழ் நீர் நல்ல முறையில் உள்ளதாக வனப்பணியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து யானைக்கு ஏற்பட்ட காயமானது இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவோ, மரங்களை உடைத்து உண்ணும் போது ஏற்பட்ட குத்துப்புண்கள் காரணமாகவோ ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், யானைக்கு ஏற்பட்ட இந்த காயமானது அவுட் காய் என்ற நாட்டு வெடிகுண்டினால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, காயமடைந்த யானை தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க தற்போது அவசியம் ஏற்படவில்லை என்று வன கால்நடை மருத்துவ குழுவினர் மருத்துவ அறிக்கை அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து பாகுபலி யானையினை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மருத்துவ குழுவினரின் பரிந்துரைப்படி காட்டு யானையினை தொடர்ந்து அதன் உடல் நிலையினை கண்காணிக்கவும், நடமாடும் காப்புக்காட்டை ஒட்டிய வனப்பகுதியில் மருந்து, ஊட்டச்சத்து மாத்திரைகளை பழங்களில் வைத்து அளிக்கும் பணி செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கால்நடை மருத்துவக்குழுவினரின் பரிந்துரையின்படி சிறுமுகை, காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வனப்பணியாளர்களை கொண்டும், கும்கி யானைகளையும் கொண்டு யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என வனத்துறையினர் நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

The post உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் பாகுபலி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Baahubali ,Mettupalayam ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...