×

வற்றி வரும் வைகையாறு இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா?

*ஆண்டிபட்டி, ேதனி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

*தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை

ஆண்டிபட்டி : தென்மேற்கு பருவமழை கைக்கொடுக்காததால் வைகை ஆறு அடியோடு வறண்டு போயுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால் ஆண்டிபட்டி, தேனி பகுதி மக்கள் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100க்கும்‌ மேற்பட்ட கிராமங்களும், 150க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இங்கு பெரும்பாலும் கிணற்றுப்பாசனம், ஆழ்த்துளை கிணற்று பாசனம் மூலமாகவே விவசாயத்தில்‌ விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் விவசாயத்திற்கு வைகை தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை இருந்தாலும், குடிநீருக்கும், கால்நடை வளர்ப்பதற்கும் வைகை ஆற்று தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணைக்கு வருசநாடு, வெள்ளி மலை, பொம்மராஜபுரம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும்‌‌ மழை வைகை அணைக்கு நீர்வரத்தாக வருகிறது. இந்த நீர்வரத்து மூல வைகை ஆற்றின் வழியாக வந்து அணையில் சேருகிறது. ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, வண்டியூர், ஏத்தக்கோவில், அனுப்பப்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி , மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வைகை ஆற்று தண்ணீர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டிபட்டி பேரூராட்சி மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் குன்னூர் கூட்டுக் குடிநீர் திட்டம், பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டம், அரப்படிதேவன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகம், நகராட்சி பகுதிகள், மற்றும் வள்ளல்நதி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இதுவரை தேனி மாவட்டத்தில் பெய்யாத நிலையில், வைகை ஆறு அடியோடு வறண்டு காணப்படுகிறது. நீர்வரத்தே இல்லாத நிலையில் குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 15க்கும் மேற்பட்ட உறைகிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது. ஆற்றில் இருந்த மணல் அனைத்தும் அள்ளப்பட்டு விட்டதால், உறை கிணற்றில் நீர்சுரப்பது குறைந்துவிட்டது. இதன்காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இனிவரும் நாட்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீரின்றி கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தாலும் உறை கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது. தண்ணீர் இல்லாமல் தற்போது வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனுப்பபட்டி, பேடிதாசன்பட்டி, மேக்கிழார்பட்டி, மறவபட்டி, டி.சுப்புலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஒரு முறை வந்துகொண்டிருந்த குடிநீர் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருக்கிறது. எனவே, பாதிக்கப்படும் பகுதிகளில் குடிநீர் தேவையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வீட்டிற்கும் கால்நடைகளுக்கு பயன்படுத்துவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் நீண்ட நாட்களுக்கு ஒருமுறை வருவதால் தண்ணீரை அதிக நாட்கள் தேக்கி வைக்க முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

மக்கள் தொகை 3 மடங்கு உயர்வு

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலைத் தொட்டிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது உள்ள மக்கள் தொகைக்கு அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது அனைத்து கிராமங்களிலும் மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளது. குடியிருப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளது.

எனவே, தற்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், பழைய மக்கள் தொகை, குடியிருப்பு அடிப்படையில் அதற்கு ஏற்ப அமைக்கப்பட்ட பழைய குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதால் தான் பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், குடியிருப்புகளின் எண்ணிக்கையின் படியும் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வற்றி வரும் வைகையாறு இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா? appeared first on Dinakaran.

Tags : Vaigayaar ,southwest ,Andipatti ,Yetani ,Antipatti ,South West ,Vaigaiyar ,
× RELATED தென்மேற்கு பருவமழை துவங்கும் முன்...