×

கிருஷ்ணகிரியில் ஜூலை 5ம் தேதி 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம்

*5லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி துவங்கும் 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியினை பார்வையிட, சுமார் 5 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மாங்கனிகள் மிகவும் சுவையானதாக உள்ளதால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இம்மாவட்டத்தில் விளையும் தோத்தாபுரி எனும் பெங்களூரா வகை மாம்பழத்தில் இருந்தும், அல்போன்சா வகை மாம்பழத்தில் இருந்தும் மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரிதும், சிறியதுமாக சுமார் 30 மாங்கூழ் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் தயாராகும் மாங்கூழ் 62 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியில் 75 சதவீதம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், ஏமன் போன்ற நாடுகளுக்கும், 15 சதவீதம் ஐரோப்பா நாடுகளுக்கும், 10 சதவீதம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் மா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இம்மாவட்டத்தில், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1992ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களில் இருந்தும் மா விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் மாங்காய்களை காட்சி படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டு வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவங்க உள்ளது. இந்த கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், அண்டைய மாநிலங்களில் விளைந்துள்ள அல்போன்சா, சிந்து, ரத்னா, மல்லிகா, பெங்களூரா, இமாம்பசந்த், காதர், பங்கனப்பள்ளி, மல்கோவா, நீலம் என 40க்கும் அதிகமான மாங்காய்கள் மற்றும் மாங்கனிகளை காட்சிப்படுத்த விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.

அத்துடன், தோட்டக்கலைத்துறை சார்பில் பார்வையாளர்களை கவரும் வகையில், ஏலக்காய், கிராம்பூ, மிளகு, வெந்தயம், சோம்பு, பட்டானி, ஜாதிக்காய், அன்னாசி பூ, ஜாதிகொட்டய், மிளகாய் விதைகள், கககசாச போன்ற 14 வகையான நறுமண பொருட்களை கொண்டு பல்வேறு பிரசித்தி பெற்ற கட்டிடங்கள் வடிவமைக்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, பெரிய அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் ஏதும் இல்லை.

எனவே, இங்கு நடைபெறும் மாங்கனி கண்காட்சியில், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்து செல்வர். கண்காட்சி நடைபெறும் சுமார் 25 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என மக்களின் மனதை இலகுவாக்கும் அனைத்து அம்சங்களும் அமைக்கப்படுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 40ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கண்காட்சிக்கு வந்து செல்வர். அதன்படி, இவ்வாண்டு இந்த கண்காட்சியினை காண சுமார் 5லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது, கண்காட்சி அரங்குகள், மேடை, தின்பண்ட கடைகள், விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் கண்காட்சியினை காண வருபவர்களுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையை ஒட்டியவாறு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் சாலை வழியாக தனியார் மருத்துவமனையை ஒட்டியும் ஏற்கனவே உள்ள பாதை வழியாக, பொதுமக்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கிருஷ்ணகிரியில் ஜூலை 5ம் தேதி 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : 29th All India Mangani Exhibition ,Krishnagiri ,Krishnakiri ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...