×

நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்: காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து சைலேந்திரபாபு கடிதம்

சென்னை: இன்றுடன் பணி ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில்; 30.06.2021 அன்று தமிழ்நாடு காவல்துறையின் தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். இன்று பணி நிறைவு பெற்று உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இரண்டாண்டு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம், காலம் குற்ற நிகழ்வுகளை தடுத்தோம், நடந்த குற்றங்களைக் கண்டுபிடித்தோம். கண்டுபிடிக்க முடியாத சில வழக்குகளில் இன்னும் தீவிர விசாரணை செய்கிறோம், ஆனால், தவறாக ஒருவரை குற்றவாளியாக்கவில்லை. அதுபோல குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட்டு விடவில்லை.

தேவர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற வழக்கமான சட்டம் & ஒழுங்கு நிகழ்வுகள் சுமூகமாக கடத்திச் சென்றோம். ஜனாதிபதி, பிரதம மந்திரி வருகைக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். தமிழ்நாட்டில் சாதி சண்டை இல்லை: மதக் கலவரம் இல்லை. இரயில் கொள்ளை, வங்கிக் கொள்ளை இல்லை துப்பாக்கி கலாச்சாரம் இல்லை. பிற மாநில கொள்ளையர்கள் அட்டகாசம் இல்லை; உ உள்ளூர் ரவுடிகள் தொல்லை இல்லை: கூலிப்படைகள் நடமாட்டம் இல்லை என்ற நிலைமையை உருவாக்கினோம். இவை அனைத்தும் உங்கள் முயற்சியால் ஏற்பட்டது. எனவே, உங்களுக்கு பாராட்டுகள்: உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சம் இதச வழக்குகள், 6 இலட்சம் சிறு வழக்குகள், 18 இலட்சம் இதர மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

மோட்டார் வாகன சட்டத்தில் 5 கோடியே முப்பதாயிரம் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 536 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும் பணியாகும். காவலர்களுக்கு 5 நாள்கள் பணி, ஆறாவதுநாள் மிகை நேர ஊதியம், ஏழாவது நாள் ஓய்வு என சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இரவு ரோந்துப்படி ரூ.300/- முதல் முறையாக அமலானது. காவலர் குடியிருப்பு அளவு 750 சதர அடி என உயர்ந்தது. மகளிர் காவலர்களின் வருகை 7 மணி என்பது 8 மணி என மாறியது; எரிபொருள் படி உயர்த்தப்பட்டது. காவலர் வாரிசுகளுக்கு பணி இட ஒதுக்கீடு பத்து சதம் மீட்கப்பட்டது, 1340 மறைந்த காவலர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நிலைய வரவேற்பு அதிகாரி வேலை, 1600 வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கப்பட்டது.

4000 சிறு தண்டனைகளைக் களைந்து, காவலர் நலன் காக்கப்பட்டது. 12:173 காவலர்களை எனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டேன். 2,400 காவலர்களை எனது பயணத்தின் போது சந்தித்து குறைகளைக் கேட்டேன். துறை நமக்கு செய்தது போல், நாமும் துறைக்கு கைம்மாறு செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நான் பணி ஓய்வு பெறும் இந்நாளில் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன். பொதுமக்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக அதிகாரிகளுக்கு நான் நேரில் பயிற்சி அளித்தேன். தலைமைப் பண்பு வளர்க்க உடல் நலம், மனநலம் காக்க வேண்டும். தொடர் கல்வி கற்க வேண்டும். ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவோடு உணவு உண்ண வேண்டும் காவல் துறையின் 134,000 பேரும் ஓர் ஆளுமை என்ற நிலை வரவேண்டும்.

அப்போது நம் செயல் சிறப்படையும், காவல் துறையின் செயல்பாட்டில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும். வதந்திகளைக் கையாண்டது, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது; கூலிப்படையினரை காணாமல் போகச் செய்தது, போதைப்பொருள் நடமாட்டத்தை குறைத்தது. தொழில்நுட்பத்தில் ஏற்படுத்திய புரட்சி போன்ற உங்கள் சாதனைகளைப் பார்த்துநான் வியப்படைகிறேன். இங்கொன்றும் அங்கொன்றும் நடந்தேறிய அசம்பாவிதங்களை நீங்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. பிரச்சனைகளை நீங்கள் வளரவிடவில்லை. பொதுமக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் இடம் பிடிப்பது நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நம்மைப்பற்றிய விமர்சனம் பல வரும்.

இங்கு குறைகள் பூதாகரமாக பார்க்கப்படும், ஆனால், நிறைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் உண்மைத்தன்மையை கண்டறிந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொண்டு, நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம். உங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நாம் சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்: காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து சைலேந்திரபாபு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sailendra Babu ,Chennai ,DGB ,Sailendrababu ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு