×

காக்கமொழியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதி

*நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை

காரைக்கால் : காரைக்கால் அடுத்துள்ள காக்கமொழியில் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்கால் மாவட்டம் நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட காக்க மொழியில் சிபிஎஸ்இ அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1964ம் ஆண்டு கட்டப்பட்டு, தொடங்கி 59 ஆண்டுகள் கடந்து நிற்கிறது.

இங்கு எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளியில் தற்போது 50க்கும் குறைவான மாணவ மாணவிகளே கல்வி பயின்று வருகின்றனர். ஆரம்ப கால கட்டத்தில் இந்த தொடக்கப்பள்ளியில் காக்கமொழி, நாக தோப்பு, நிரவி மற்றும் ஓடுதுறை கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இதற்கிடையில் பள்ளி தொடங்கப்பட்டு 59 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும், வளர்ச்சியும் ஏற்படுத்தவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தொடக்க காலத்தில் இங்கு ஒரே ஒரு கட்டிடம் மட்டும் கட்டப்பட்டது. ஒவ்வொரு வகுப்புக்கும், தனித்தனி வகுப்பறைகள் கிடையாது.

எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை 40 மாணவர்கள் நடப்பு ஆண்டில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் ஒரு பொறுப்பு தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இங்கு படிக்கும் அணைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி கட்டிடத்தின் அலுவலக ஹாலில் பாடங்கள் நடைபெற்று வருகிறது.எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளியின் வளாகத்தில் அனைத்து மாணவர்களையும் அமர வைத்து வகுப்புகள் நடைபெறும் அவலம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதில் கஷ்டங்களும் உள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது மாணவர்களின் வருகை குறைந்துள்ளது.

பள்ளி கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு சூழல் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. மேலும் பள்ளியில் சரியான விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு சாதனங்கள் இல்லாமல் இருப்பதால் மாணவர்களின் விளையாட்டு திறனை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் காக்க மொழி தொடக்கப் பள்ளியை நேரடியாக வந்து பார்வையிட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிபிஎஸ்இ பள்ளியா?

காக்கமொழி அரசு தொடக்கப்பள்ளியானது சிபிஎஸ்இ பள்ளியாகும். ஆனால் சிபிஎஸ்இ பள்ளி என எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். வகுப்பறையில் ஒரு ஸ்மார்ட் கிளாஸ் அந்தஸ்தை பெறுவதற்கான சிறப்பு கல்வி கற்கும் உபகரணங்கள், ப்ரொஜெக்டர்கள் கூட இல்லாத சூழல் நிலவி வருகிறது. பெற்றோர்கள் பார்வையில் இந்த பள்ளி சிபிஎஸ்இ பள்ளியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

The post காக்கமொழியில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kakkangalu ,Karaikal ,Kaharagulam ,Kharanganga ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...