×

இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள் ஆளுநரே :சு வெங்கடேசன்

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்.பி. சு வெங்கடேசன் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஆளுநரின் செய்திகுறிப்பு
நிறுத்தி வைப்பு.

ஆளுநரை நீக்க
இராஜ்பவன் தோட்டக்காரருக்கு எப்படி அதிகாரம் இல்லையோ
அப்படித்தான் அமைச்சரை நீக்கும் அதிகாரம் உங்களுக்கில்லை
ஆளுநரே.

இல்லாத அதிகாரத்தை
பயன்படுத்துகிற
உங்கள் பழக்கத்தையே
நிறுத்துங்கள்.

தீமைக்கு விசுவாசமாக இருப்பதை கைவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில்,”அமைச்சரின் நியமனமும், நீக்கமும் முதல்வரின் அதிகாரம்.

கவர்னரே!

உங்கள் மூக்கு
எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்!

அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு!”, எனக் கூறியுள்ளார்.

ஆளுநரின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்!!

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த 14ம்தேதி அதிகாலை கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது தெரிய வந்தது. பிறகு செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரை செய்தார். இதில் இலாகா மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். மாறாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 16ம்தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று, தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியை நீக்கியுள்ளதாக கவர்னர் மாளிகை அறிவித்தது. ஆளுநரின் இந்த உத்தரவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.ஆளுநரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் கிளம்பியதை அடுத்து சில மணி நேரங்களிலேயே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசியதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post இல்லாத அதிகாரத்தை பயன்படுத்துகிற உங்கள் பழக்கத்தையே நிறுத்துங்கள் ஆளுநரே :சு வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Governor ,Su Venkatesan ,Chennai ,Tamil Nadu ,R. N.N. Madurai M. ,Rawi ,GP ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...