×

வணிக குறியீடு பதிவு விவகாரம் ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி பெயரில் ஓட்டல் நடத்த தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆம்பூர் ஸ்டார் பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் அனீஸ் அகமது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கொள்ளு தாத்தா கடந்த 1890ல் ‘ஆம்பூர் ஸ்டார் பிரியாணி’ என்ற ஓட்டலை தொடங்கினார். தற்போது சென்னை, மதுரை, சேலம், கோவை உள்பட நகரங்களில் 33 கிளைகளும் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 10 கிளைகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கிளை என மொத்தம் 44 ஓட்டல்களை நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவன பெயர் உள்ளிட்டவைகளை வணிக குறியீடாக பதிவு செய்துள்ளோம். இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு ஒட்டலில் ‘ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி’ என்ற பெயரில் எங்களின் வர்த்தக குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.

எங்கள் வர்த்தக குறியீட்டை அந்த ஓட்டல் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகிவாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில் ஓட்டல் நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக ஜூலை 12ம் தேதி பதில் அளிக்குமாறு அந்த ஓட்டல் நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post வணிக குறியீடு பதிவு விவகாரம் ஒரிஜினல் ஸ்டார் பிரியாணி பெயரில் ஓட்டல் நடத்த தடை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Original Star Biryani ,Chennai ,Anees Ahmed ,Ambur Star Biryani ,Madras High Court ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!