×

ராகுலின் அன்பின் கடைக்கு அவசியமில்லை: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடல்

யமுனாநகர்: காங்கிரஸ் தலைவரின் அன்பின் கடை என்று அழைப்பதற்கான தேவையில்லை என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசின் 9 ஆண்டுகள் நிறைவையொட்டி அரியானாவில் நடந்த பேரணியில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் சிறப்பு உயர்ந்துள்ளது. முன்னர் நினைத்து பார்க்க முடியாத பல திட்டங்கள் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது காங்கிரஸ்காரர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்களின் ஒரே தலைவர் மற்றும் அந்த நேதாஜி எங்கு சென்றாலும் வெறுப்பின் சந்தை இருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் அன்பின் கடையை திறக்க வந்துள்ளார். அரியானாவில் ஏதேனும் வெறுப்பு சந்தை இருக்கிறதா? என்று உங்களிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவரின் அன்பின் கடைக்கு இடமில்லை. வெறுப்பு எங்கே இருக்கிறது?. தேவையில்லாமல் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் முட்டாள்தனமாக பேசுகின்றனர்” என்றார்.

இதனிடையே ராஜஸ்தானின் பாரத்பூரில் பாஜ அலுவலகத்தை கட்சியின் தலைவர் ஜேபி நட்டா திறந்து வைத்தார். தொடர்ந்து நட்பாய் நகரில் கூட்டத்தில் பேசிய பாஜ தலைவர் ஜேபி நட்டா, ‘‘உலக நாடுகள் பிரதமர் மோடியை புகழ்ந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இங்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகின்றது. ஆஸ்திரேலிய பிரதமர், மோடி நீங்கள் தான் தலைவர் என்கிறார். எலான் மஸ்க், நான் மோடியின் ரசிகன் என்கிறார். ஆனால் இங்கே காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு அவரை தேள், பாம்பு, டீ விற்பவர் என்று விமர்சிக்கின்றனர். பிரதமர் மோடி நாட்டை வாரிசு அரசியலில் இருந்து வளர்ச்சி அரசியலுக்கு கொண்டு சென்றார்” என்றார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், ‘‘ராகுல்காந்தியின் வௌிநாட்டு நிகழ்ச்சிகள், நாட்டிற்கு எதிரான இந்திய எதிர்ப்பு சக்திகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஏன் இதுபோன்றவர்களுடன் ராகுலும், காங்கிரசும் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

 

The post ராகுலின் அன்பின் கடைக்கு அவசியமில்லை: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Defense Minister ,Rajnath Singh Chatal ,Yamunanagar ,Union ,Rajnath Singh ,Congress ,
× RELATED மிக்ஜாம் புயல்.. மழை, வெள்ள சேதங்களை...