×

தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 32 மணிநேரம் ‘சாகர் கவாச்’ ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு

சென்னை: கடல் மார்க்கமாக தீவிரவாதம் அச்சுறுத்தல் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு குமுமம் சார்பில் 32 மணி நேரம் ‘சாகர் கவாச்’ என்ற பெயரில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் போலீசாரே தீவிரவாதிகள் போல் வேடம் அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். மும்பை தொடர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர பாதுகாப்பு படை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, க்யூ பிரிவு, ஒன்றிய மற்றும் மாநில உளவுத்துறை போலீசார் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 12 கடலோர மாவட்டங்களில் 32 மணி நேரம் ‘சாகர் கவாச்-23’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையால் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி என 12 கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. இதில், போலீசாரே தீவிரவாதிகள் வேடத்தில், டம்மி வெடிகுண்டுகள், டம்மி துப்பாக்கியுடன் படகு மூலம் தமிழக கடற்கரை மார்க்கமாக உள்ளே நுழைவது போலவும், போதை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்குள் கடத்தி வருவது போலவும் ஒத்திகை நடந்தது.நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் படகுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் தென்பட்டால் அதுகுறித்து உடனே கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு குழுமம் டிஎஸ்பி தலைமையில் அதிநவீன ரோந்து படகுகள் மற்றும் மீனவர்களின் விசை படகுகள் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையால் தமிழக கடலோர மாவட்டங்கள் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

The post தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 32 மணிநேரம் ‘சாகர் கவாச்’ ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kumumam ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...