×

தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் பதவியேற்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த அருண், தமிழ்நாடு காவல் துறை சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபியாக நேற்று முன்தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டார். 1998ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டயப்படிப்பும் முடித்துள்ளார். இந்திய காவல் பணி பயிற்சி முடித்தவுடன் நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், பின்னர் துணை ஆணையராக சென்னை, அண்ணாநகர் மற்றும் புனித தோமையார் மலை மாவட்டங்களில் பணிபுரிந்ததோடு, தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

2012ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜியாகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் -ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016ம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராகவும், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு (வடக்கு) பணியாற்றியுள்ளார். 2021ம் ஆண்டு இரண்டாவது முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றியுள்ளார். 2022ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.

காவல்துறையின் பல முக்கிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ள இவர், தனது பணிக்காலத்தில் பெரும் பகுதியை சட்டம் மற்றும் ஒழுங்கு பதவிகளில் பணியாற்றியுள்ளார். ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். சிபிசிஐடியில் பணியாற்றியபோது பனையூரில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலதிபர் ஒருவர் கப்பல் கேப்டன் மற்றும் அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்தபோது பொதுமக்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அடையாறு போலீஸ் விசாரணையின்போது அவர் மரணமடைந்தார். இந்த இரு வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அருண் பணியாற்றி உண்மையை கண்டறிந்தார். திருப்பூர் எஸ்பியாக பணியாற்றியபோது பாசி என்ற பல நூறு மோசடி வழக்குகளை விசாரித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு என்பதை கண்டறிந்து, நேர்மையாக வழக்கை நடத்தினார். பல்வேறு முக்கிய வழக்குகளில் துப்பு துலக்கியதோடு, சட்டம் -ஒழுங்கை நிலை நாட்டுவதில் திறமை பெற்றவர், தற்போது, தமிழ்நாடு காவல்துறை சட்டம் (ம) ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.

The post தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அருண் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Arun ,ATGP ,Order ,Tamil Nadu Police Department ,CHENNAI ,ADGP ,Tamil Nadu Police ,Tamilnadu Police Department ,
× RELATED குரல் குளோனிங்கை பயன்படுத்தி...