×

இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.3.6 கோடி செலவில் சென்னையில் ‘டிரோன் போலீஸ் யூனிட்’ திறப்பு: டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னையில் குற்றங்களை தடுக்கவும், உயிர்களை காக்கவும் ரூ.3.6 கோடி செலவில் புதிய ‘டிரோன் போலீஸ் யூனிட்’ என்ற அமைப்பை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இது இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகர காவல்துறை, அடையார் அருணாசலபுரம் முத்துலட்சுமி பார்க் அருகே ‘டிரோன் போலீஸ் யூனிட்’ என்ற மையத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் சாலையில் செல்லும் வாகன பதிவு எண்ணை துல்லியமாக பார்க்க முடியும். அதன் அடிப்படையில் குற்றத்தில் தொடர்புடைய வாகனத்தை பிடிக்கலாம். மேலும், செயற்கை நுண்ணறிவு டிரோன்கள் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இந்த திட்டத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் ‘டிரோன் போலீஸ் யூனிட்’டை நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது: தமிழ்நாடு காவல் துறையை நவீனமயமாக்குவது என்பது தமிழ்நாடு முதல்வருடைய கனவு திட்டம். அதற்கு 2 திட்டங்களை தயாரித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, டிரோன் போலீஸ் யூனிட் என்ற திட்டத்தை அறிவித்தார். அதற்காக ரூ.3.6 கோடி நிதியை ஒதுக்கினர். இந்த திட்டத்தின் கீழ் தற்போது திறக்கப்பட்டுள்ள ‘டிரோன் போலீஸ் யூனிட்’ 9 டிரோன்களை கொண்ட ஒரு புதிய அமைப்பு சென்னை காவல் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் 3 வகையான டிரோன்கள் உள்ளது. ஒன்று, மெரினா போன்ற இடங்களில் உயிர்காப்பதற்கான அதிக திறன் கொண்ட டிரோன் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய இடத்துக்கு பொருட்களை எடுத்து செல்லும் வகையிலான டிரோன். 2வதாக, குற்றம் நடந்த இடத்துக்கு உடனே செல்ல வேண்டும்; குற்றவாளிகளை பிடிக்க வேண்டும். அந்த இடங்களுக்கு விரைவாக செல்லக்கூடிய டிரோன்கள், 3வதாக அதிக தொலைவு செல்ல கூடிய டிரோன் என 3 விதமான டிரோன்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காவல் நிலையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் குறைந்த நாட்களில் தேர்வு செய்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக டிரோன் காவல் நிலையம் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ஒரு பொறியாளர், டெலிலியல் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர். தொழில் நுட்பம் தெரிந்த அவர் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். தமிழக காவல்துறையில் தொழில் நுட்பம் வந்துவிட்டது. அது குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தற்போது உள்ள காவலர்களில் 80% பேர் பட்டதாரிகள். 15 முதல் 20% வரையிலான காவலர்கள் இன்ஜினியர்களாக உள்ளனர் என்றார்.

* சைபர் குற்றத்தை தடுக்க புதிய ஆப் அறிமுகம்

டிஜிபி சைலேந்திர பாபு கூறுகையில், ‘‘தமிழ்நாடு போலீசார் சைபர் கிரைம் பிரிவில் அதிக கவனம் செலுத்தி உள்ளனர். எந்த குற்றங்கள் அதிகளவு நடந்துள்ளது. இனி, எந்த வகையிலான குற்றங்களை செய்ய திட்டமிடுவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். அதற்காக குற்றம் நடப்பதை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* குற்றவாளிகள் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில், புதிய டிரோன்கள் மூலம் குற்றங்கள் குறைக்கப்படும். நடக்கும் குற்றங்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். குற்றவாளிகள் தப்பி சென்றாலும் கூட அவர்களை டிரோன் உதவியால் கண்டுபிடிக்க முடியும். யாரும் தப்பிக்க முடியாது. டிரோன் போலீஸ் யூனிட் மட்டும் அல்லாமல், வரும் காலங்களில் நமது காவல்துறை நிறைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.3.6 கோடி செலவில் சென்னையில் ‘டிரோன் போலீஸ் யூனிட்’ திறப்பு: டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Drone Police Unit ,Chennai ,India ,DGB Sailendra Babu ,Police Commissioner ,Shankar Jiwal ,DGB ,Sailendra Babu ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...