×

அரிசி அரசியல்

பா ஜ ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசுக்கு மறைமுகமாக தொல்லை கொடுக்கும் பணியை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஆளுநரை கொண்டு தொல்லை கொடுக்கவைக்கிறார்கள். ஆளுநரும் அரசியல் தலைவர் போன்றே நடந்து கொள்கிறார். இதற்கு வேறெங்கும் உதாரணம் தேட வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் அன்றாடம் பார்த்து வருகிறோம். இது இப்படி என்றால், அண்டை மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தல் நேரத்தில் அறிவித்த இலவச திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக 39 லட்சம் ஏழை மக்கள் பயனடையும் வகையில் வறுமை கோடுக்கு கீழே உள்ள பிபிஎல் ரேஷன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி ஜூலை 1ம் தேதி முதல் வழங்குவதாக அறிவித்தது. இதற்காக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய உணவு கழகத்திடம் அரிசி கொள்முதல் செய்ய அம்மாநில அரசு கோரிக்கை வைத்தது. முதலில் அரிசி வழங்க ஒப்புக்கொண்ட உணவு கழக அதிகாரிகள் திடீரென அரிசி கையிருப்பு இல்லை என்று அறிவித்தனர். பின்னர் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை வினியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்தது.

கர்நாடக மாநிலத்தில் மகளிர் இலவச பஸ் பயண திட்டம் வரவேற்பு பெற்றுவிட்டதை தொடர்ந்து அடுத்த இலவச திட்டத்தையும் வெற்றிகரமாக அமல்படுத்தி காங்கிரஸ் அரசு மக்களிடம் நல்ல பெயர் எடுத்துவிடக்கூடாது என்ற முனைப்புடன் ஒன்றிய பாஜ அரசு தனது அரசியலை அவிழ்த்துவிட்டுள்ளது. ஒன்றிய அரசு அரிசி தராவிட்டாலும் தனியாரிடமோ, அரிசி விளைவிக்கும் மாநிலங்களிடமோ கொள்முதல் செய்து இலவச திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்காக மத்திய ஏஜென்சி 3 பேரிடம் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. இதையும் முடக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு கழக தலைவர் தனியார் வணிக நிறுவனங்கள் மாநிலங்களுக்கு அரிசி விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையை சேர்த்துள்ளார். இப்படி அனைத்து வழிகளையும் அடைத்து காழ்ப்புணர்ச்சியை ஒன்றிய அரசு காட்டி வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு அரிசிக்கு பதில் பயனாளிகளுக்கு பணம் வழங்குவதாக அறிவித்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. இப்படி இலவச திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் ஒன்றிய அரசு காங்கிரஸ் அடுத்து அமல்படுத்த இருக்கும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை பாதிக்கும் வகையில் இரவு நேரங்களில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கூடுதலாக 20 சதவீத கட்டணம் நிர்ணயித்து அரசியல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி எல்லா வகையிலும் மாநில அரசுக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தொல்லை தரும் ஒன்றிய பாஜ அரசு, மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பார்க்கிறது. சமீபத்தில் புதுவை மாநில முதல்வர் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்று வாய்விட்டு புலம்பியதே இதற்கு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரிசி அரசியல் appeared first on Dinakaran.

Tags : Rice ,Government of the Union ,
× RELATED 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்