×

பிரான்சில் 17 வயது கருப்பின சிறுவனை சுட்டு கொன்ற போலீஸ்: போலீசை கண்டித்து போராட்டம்

* 150 பேர் கைது

நான்டெர்(பிரான்ஸ்): பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 17 வயது கருப்பின சிறுவனை காவல்துறை சுட்டு கொன்றதை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரிசின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் நிற்காமல் சென்ற காரை துரத்தி சென்ற காவல்துறையினர் காரை சுற்றி வளைத்து, ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரை ஓட்டி வந்த ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த நேல்(17) என்ற கருப்பின சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இந்த சம்பவம் பாரிஸ் நகர மக்களை கொதிப்படைய செய்துள்ளது. காவல்துறையை கண்டித்து பல இடங்களில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். பாரிஸ் நகரம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரிந்து வருகிறது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 2,000 காவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுவன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், “இது மன்னிக்க முடியாத குற்றம். குற்றவாளி தண்டிக்கப்படுவார். மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post பிரான்சில் 17 வயது கருப்பின சிறுவனை சுட்டு கொன்ற போலீஸ்: போலீசை கண்டித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nanterre ,France ,Paris ,Dinakaran ,
× RELATED பிரான்சில் வாண வேடிக்கைகளுடன்...