×

டைட்டானிக்கை பார்க்க நீர் மூழ்கியில் சென்று பலியானவர்களின் உடல் பாகங்கள் மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை தகவல்

போர்ட்லேண்ட்: அட்லாண்டிக் கடலில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி ஆழ்கடலில் மூழ்கி கிடக்கின்றது. கடலில் மூழ்கி கிடக்கும் இந்த கப்பலை பார்ப்பதற்காக சிலர் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற நிறுவனத்தின் டைட்டன் எனும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக்கை பார்ப்பதற்காக 5 பேர் கொண்ட குழு போனது. இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென காணாமல் சென்றது. 4 நாட்கள் தேடுதல் பணிக்கு பின் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதாகவும் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல் பாகங்கள் அட்லாண்டிக்கின் ஆழமான பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 3810 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலில் இருந்து 488மீட்டர் தூரத்தில் இருந்து இவை கண்டறியப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்த கப்பலின் உடைந்த பாகங்கள் ஆர்டிக் ஹாரிசான் கப்பல் மூலமாக நேற்று முன்தினம் கனடாவின் நியூபவுன்ட்லேண்ட் அண்ட் லேப்ராடலில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் இவை வாகனத்தில் கிரேன் மூலமாக ஏற்றிச்செல்லப்பட்டது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் மனித உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் அமெரிக்கா கொண்டுவரப்படும். மீட்கப்பட்ட உடைந்த பாகங்கள் மற்றும் மனித உடல் பாகங்களை அமெரிக்க மற்றும் கனடாவை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய இருக்கின்றனர். இது டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஏன் வெடித்து சிதறியது என்பதற்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணையின் முக்கிய பகுதியாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post டைட்டானிக்கை பார்க்க நீர் மூழ்கியில் சென்று பலியானவர்களின் உடல் பாகங்கள் மீட்பு: அமெரிக்க கடலோர காவல்படை தகவல் appeared first on Dinakaran.

Tags : US Coast Guard ,Portland ,Atlantic Ocean ,
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்