×

ரூ.100 கோடிக்கு ரூ.2000 நோட்டுகள் இருப்பதாக கூறி மோசடி: தமிழ்நாட்டை சேர்ந்த டிஸ்மிஸ் எஸ்ஐ கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இருப்பதாக கூறி ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டிஸ்மிஸ் ஆன சப் இன்ஸ்பெக்டரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.2000க்கு ரூ.500 நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாக பாலக்காடு மாவட்ட எஸ்பி ஆனந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கும்பலை பிடிக்க பாலக்காடு ஏஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பிரபல ரவுடியை கைது செய்தனர். இவனுடன் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் வேலன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சரவண வேலன் கடந்த 2011ல் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். ஒரு விஜிலென்ஸ் வழக்கில் சிக்கிய இவர் கடந்த 2013ல் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பிறகும், தான் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பாலக்காட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பதாகவும், தன்னிடம் ரூ.100 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதற்கு ரூ.500 நோட்டுகள் தந்தால் பெருமளவு கமிஷன் தருவதாகவும் கூறி ஆசை காட்டியுள்ளார். இதை நம்பி பலரும் ரூ.500 நோட்டுகளுடன் அவரை அணுகியுள்ளனர். ஆனால் ரூ.500 நோட்டுகளை வாங்கிய பின்னர் அதற்கு ரூ.2000 நோட்டுகளை கொடுக்காமல் சரவண வேலன் அவர்களை போலீஸ் பாணியில் மிரட்டி அனுப்பி வைத்து விடுவார். இவரது மோசடி தொடர்பான விவரங்களை தமிழக போலீசாருக்கு பாலக்காடு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

The post ரூ.100 கோடிக்கு ரூ.2000 நோட்டுகள் இருப்பதாக கூறி மோசடி: தமிழ்நாட்டை சேர்ந்த டிஸ்மிஸ் எஸ்ஐ கேரளாவில் கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Tamil Nadu ,Kerala ,Thiruvananthapuram ,Othanchatra ,Dinakaran ,
× RELATED குட்கா கடத்தியவர் கைது