×

திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஆம்புலன்சை அழைத்தால் தட்டிக்கழிப்பு: பொதுமக்கள் புகார்

திருமயம்: திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்க சுங்கச்சாவடி ஆம்புலன்சை அழைத்தால் ஏதாவது சாக்குபோக்கு கூறி தட்டிக் கழிப்பதாக புகார் எழுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வழியாக திருச்சி, மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரம், தஞ்சாவூர் போன்ற முக்கிய பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் நடக்கும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்கின்றன.

இதனிடையே திருமயத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் நடக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஆம்புலன்ஸ் இயக்க டிரைவர், டீசல் இல்லையென விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்காமல் தட்டிக் கழிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் விபத்து ஒன்று நடைபெற்றது. அந்த விபத்தில் காயம் அடைந்தவரை மீட்க லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் இயக்க டீசல் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் கழித்து புதுக்கோட்டையிலிருந்து வந்த தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் காயமடைந்தவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் வர மறுத்தது குறித்து அப்பகுதி மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், ஜீப் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும், ஜீப் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ், ஜீப் இயக்க டிரைவர்கள் வருவதில்லை. மேலும் விபத்தில் சிக்கியவர்கள் சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டால் டீசல் இல்லை என தட்டிக் கழித்து விடுகின்றனர் என்றார்.

எதுவாயினும் திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் தயாராக இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஆம்புலன்சை அழைத்தால் தட்டிக்கழிப்பு: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,National Highway ,Tirumayam ,
× RELATED ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...