×

அட்டப்பாடி அருகே ஊருக்குள் தஞ்சமடைந்து வனத்துறை முகாமில் வளர்ந்த குட்டி யானை ‘திடீர்’ மரணம்

பாலக்காடு : அட்டப்பாடி அருகே ஊருக்குள் தஞ்சமடைந்து வனத்துறையினர் பராமரிப்பில் வளர்ந்த குட்டி யானை திடீரென மரணமடைந்தது வன ஊழியர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பாலூர் பகுதியிலுள்ள தனியாரின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டத்தில் இருந்து குட்டி யானை ஒன்று வழி தவறியது.

இந்நிலையில் இந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பொம்மியம்பாடி வனத்துறை முகாமிற்கு கொண்டு வந்து கிருஷ்ணா என்ற பெயர் சூட்டி பராமரித்து வளர்த்து வந்தனர். இதற்கு தேவையான உணவு வகைகள், குடிநீர், இளநீர் ஆகியவற்றை அளித்து, காட்டில் உள்ள தாய் யானையுடன் சேர்ப்பதற்காக வனத்துறையினர் திட்டமிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 13 நாட்கள் பொம்மியம்பாடி முகாமில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் குட்டி யானை சோர்வடைந்து காணப்பட்டது. புல் தரையில் படுத்து கிடந்த குட்டி யானையை பரிசோதித்த வனத்துறை கால்நடை மருத்துவர் டேவிட் இப்ராஹிம் சிகிச்சை அளித்து உணவு, மருந்து மாத்திரைகள் வழங்கினார். இவற்றை உட்கொண்ட குட்டி யானை சுறுசுறுப்புடன் விளையாடி கொண்டிருந்தது. திடீரென நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் குட்டி யானை உயிரிழந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து குட்டி யானையின் உடலை ஆய்வு செய்தனர். இந்நிலையில் குட்டி யானை இறந்ததால் அதனை பராமரித்து பாசமாக வளர்த்த வனத்துறை ஊழியர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்த 13 நாட்கள் வனத்துறை காவலர்களுடன் அன்யோன்யமாக பழகிய யானை குட்டி உயிரிழந்தது அப்பகுதி சேர்ந்த மக்களையும் அதிர்ச்சியில் மூழ்கச்செய்துள்ளது.

The post அட்டப்பாடி அருகே ஊருக்குள் தஞ்சமடைந்து வனத்துறை முகாமில் வளர்ந்த குட்டி யானை ‘திடீர்’ மரணம் appeared first on Dinakaran.

Tags : Attapadi ,Palakkad ,Attappadi ,Dinakaran ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது