×

108 ஆம்புலன்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல்லில் ஜூலை 1ல் நடக்கிறது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு ஜூலை 1ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் துரிதமான முறையில் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேலைக்கு அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 1ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி,(பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இதில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், மாதம் ஊதியம் ரூ.15,435 வழங்கப்படும். தேர்வு அன்று 19 வயதிற்கு மேல் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இதற்கான தேர்வு முறையானது எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படையிலும், இறுதி கட்ட தேர்வானது மனிதவள துறையின் மூலம் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் எடுக்கப்படும். இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும், டிரைவர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் ரூ.15,235 வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் கலந்து கொள்ளலாம். இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வைத்து இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9154251130 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 108 ஆம்புலன்ஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு திண்டுக்கல்லில் ஜூலை 1ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...