×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ரூ.19 கோடியில் புதுப்பிக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில், ரூ.19 கோடி மதிப்பில் பழுது பார்த்து, புதுப்பிக்கும் பணிகள் நடக்க உள்ளது. இதனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: தமிழ்நாட்டில் பழமையான கோயில்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் 2022-2023ம் ஆண்டு ரூ.100 கோடி அரசு சார்பில் நிதி ஒதுக்கினார். அதேபோல், 2023-2024ம் ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்படவுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் பணிக்கு இன்று (நேற்று) பாலாலயம் நடைபெற்றது. இக்கோயிலில் 27 பணிகள் நடைபெறவுள்ளன. அவற்றில், ரூ.17 கோடி அரசு நிதியிலிருந்தும், ரூ.2 கோடி கோயில் நிதியிலிருந்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், வருகின்ற 5 வருடத்திற்குள் 500 கோயில்கள் புனரமைக்கப்பட்டு 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 2023-2024ம் ஆண்டில் 56 கோயில்கள், 134 பணிகள், ரூ.10.5 கோடி செலவில் பணிகள் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 788 கோயில்களில் பணிகள், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடைபெற்றது. மேலும், சட்ட விரோதமான நில ஆக்கிரமிப்புகாரர்களிடமிருந்து 5001 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4,740 கோடி.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை முத்துலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ரூ.19 கோடியில் புதுப்பிக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Ekambaranatha Temple ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Kanchipuram Sri Ekambaranathar Temple ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...