×

மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் உதிரி பாகம் கழற்றி விற்ற எஸ்ஐக்கள்

வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூரை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் விநாயகம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் 2 டிப்பர் லாரி வைத்துள்ளேன். கடந்த 25.1.2022 அன்று பள்ளிகொண்டாவில் மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டேன். அப்போது 2 டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. நான் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 மாதங்கள் சிறையில் இருந்தேன். மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து லாரிகளை மீட்க மே மாதம் சென்றபோது, லாரியில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அப்போதைய பள்ளிகொண்டா எஸ்ஐக்கள் விக்னேஷ், கண்ணன் ஆகியோர் கழற்றி விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து உயரதிகாரிகளிடம் புகார் செய்தேன். இதையடுத்து அதற்கு ஈடான பணத்தை வழங்குவதாக இருவரும் கூறினர். இதில் விக்னேஷ் மட்டும் ரூ.30 ஆயிரம் கொடுத்தார். எஸ்ஐ கண்ணன் இதுவரை பணம் தரவில்லை. அவரிடம் பணத்தை கேட்டபோது, மீண்டும் உன்னை மணல் கடத்தல் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே எனது லாரியில் திருடிய பொருட்களை மீட்டு தர நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். உடனடியாக எஸ்பி மணிவண்ணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரை அழைத்து புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். ‘உடனடியாக பணத்தை கொடுக்காவிட்டால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர் இந்த சரகத்தைவிட்டே மாற்றம் செய்யப்படுவார்’ என எஸ்பி எச்சரித்தார்.

The post மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் உதிரி பாகம் கழற்றி விற்ற எஸ்ஐக்கள் appeared first on Dinakaran.

Tags : SIs ,Vellore ,Vellore SP ,SP Manivannan ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...