×

பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*பெரியாழ்வார் அவதாரம் – 29.6.2023

ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்கு ஒரு ஏற்றம் உண்டு. மற்றைய ஆழ்வார்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு “பெரியாழ்வார்” என்ற அவர் பெயரிலேயே இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்று சொன்னால், அவருடைய அற்புதமான பிரேம பக்தி. இறைவனிடம் மற்ற ஆழ்வார்கள் ‘‘வாடினேன் வாடி வருந்தினேன்’’ என்றும், ‘‘நீசனேன் நிறை ஒன்றும் இலேன்’’ என்றும், ‘‘பாவியேன் பாவியேனே’’ என்றும், தங்களுடைய பிறவித் துன்பங்களைப் பற்றிக் கூறி, அதிலிருந்து விடுதலை செய்யும்படி வேண்டினார்கள். ஆனால், பெரியாழ்வார் தன்னைப்பற்றி எந்தக் கவலையும் படவில்லை. அவர் பகவானைப் பற்றி கவலைப்பட்டார்.

பக வானுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அச்சப்பட்டார். அச்சம் இல்லாத இடத்தில் அச்சப்படுவது ‘‘அஸ்தான பயஸங்கை’’ என்று வடமொழியில் சொல்லுவார்கள். இதற்குக் காரணம் பெரியாழ்வாரின் தாய்மை குணம். எல்லையற்ற பரிவு. அந்த பரிவு விஞ்சி யதால் பட்டபிரான் என்றும் விஷ்ணு சித்தர் என்றும் சொல்லப்பட்ட அவருக்கு “பெரியாழ்வார்” என்கின்ற பெயர் நிலைத்தது. தன்னுடைய வளர்ப்பு மகளாகிய ஆண்டாளை பெருமாளுக்கே மணமுடித்துக் கொடுத்து, மாமனார் என்கிற பெருமையைப் பெற்றார். வேதத்தின் அடையாளமான கருடாழ்வாரின் அம்சமான அவர், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தார்.

பாமாலை, பூமாலை என்று இரண்டு மாலைகளைக் கட்டி இறைவனுக்குச் சமர்ப்பித்தார். ஒரு மாலையில் நறுமணம். இன்னொரு மாலையில் தமிழ் மணம். தாய்மையின் விஞ்சிய பரிவால் இறைவனைக் குழந்தையாக்கி இசைத் தமிழால் பிள்ளைத்தமிழ் பாடினார். இன்றும் கோயில்களில் இரவு அர்த்தசாம பூஜையில் பால் நிவேதனம் செய்து, அவர் பாடிய மாணிக்கத்தமிழைப் பாடி மஹேசனை பள்ளியறை செய்து திரையிடுகிறார்கள்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ

திருக்காப்பு செய்யும் போது பாடப்படும் பாடலும் பெரியாழ்வார் பாடல்தான்.

உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறி நாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!
இறவுபடாமல்இருந்த எண்மர் உலோகபாலீர்காள்!
பறவைஅரையா! உறகல் பள்ளியறைக்குறிக் கொண்மின்

இப்பாட்டில், எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களையும், அஷ்டதிக் பாலகர்களையும், வாகனத்தையும் விளித்து, நீங்களெல்லாருமாகச் சேர்ந்து உறங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்து எம்பெருமானுடைய படுக்கை அறையை பாது காத்துக் கொண்டிருங்கள் என்கிறார்.

பக்தி இலக்கியத்தில், பிள்ளைத்தமிழ் மரபினைத் தொடங்கி வைத்தவர் பெரியாழ்வார் என்று சொல்வார்கள். அந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ் அமுதமாய்த் தித்திக்கும். வேண்டிய வேதங்கள் ஓதி, பாண்டியன் அவையிலே பொற்கிழியைப் பெற்றவர். வேதாந்த விஷயமான அருமையான தத்துவப் பாடல்களை எளிமையாகப் பாடி இருக்கிறார். அப்பாடல்கள் நாம் அகக்கண்ணைத் திறந்து, அகத்தில் உறையும் எம்பெருமானைக் காண வைக்கும். அவருடைய தத்துவப் பாசுரங்களில் ஒன்று இது. மூன்றெழுத்து என்கிற எண்ணை வைத்துக் கொண்டு தமிழில் என்ன அழகாகச் சித்து விளையாடுகிறார் பாருங்கள்.

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை –
ஏற்றுக்கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய
எம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்றருவானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின்
கரைமேல் கண்டமென்னும் கடிநகரே.

ருக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களினின்றும் அடைவே, பூ: புவ: ஸுவ: என்ற மூன்று வயாஹ்ருதிகளையும் தோன்றுவித்து, பொன்வாணியன் பொன்னைப் புடபாகம் வைப்பதுபோல எம்பெருமான் தனது சங்கல்பத்தினால் அவற்றை ஓடவைத்து, அவற்றில் நின்றும் அகார, உகார, மகாரங்களாகிற மூன்று அக்ஷரங்களைத் தோற்றுவித்தான். அம்மூன்றையும் ஸந்தி கிராமத்தில் ‘ஓம்’ என்று ஒரே எழுத்தாக்கினான்.

(மூன்றெழுத்ததனை மூன் றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கினான்)மூன்றெழுத்தாகிய பிரணவத்தை நிருத்தி க்ரமத்தினால் (அதாவது – ப்ரக்ரியை பண்ணும் மூன்று பதமாய் மூன்று அர்த்தங்களுக்கு வாசகமாயிருக்கும்) அகார உகார மகாரங்களாகிய மூன்றெழுத்தாகப் பிரித்து, அவற்றுள் அகாரம் ஜீவாத்துமாவுக்குள் பகவச்சேஷத்துவத்தைக் (இறைவனுக்கு மட்டுமே அடிமைசெய்தல் – பாரில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம். பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் என்பது) உகரம் அவதாரணாத்தத்தைக் கூறி, அதனால் இந்த அடிமைத்துவம் ஸ்ரீமந்நாராணன் பக்கலிலன்றி வேறு யாருக்கும் இல்லை. (உனக்கே நாம் ஆட்செய்திருப்போம்), என்றார்.

மகாரம் “மக-ஜ்ஞாநே” என்கிற தாதுவினின்றும் பிறந்து ஞாலத்தைக் கூறுமதாயும், அநந்யார்ஹ சேஷத்வத்துமான (எம்பெருமானைத் தவிர, வேறு யாருக்கும் ஆட்படுதல் இல்லை) என்ற ஞான உணர்வால் ஆத்மா தேஹம் முதலியவற்றிற்காட்டில் விலக்ஷணன் என்று புலப்படுத்தும் இந்த ஆத்மா. இம்மூன்றெழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து உணர்ந்து பிரணவத்தை அநுஸந்திருப்பவர் ஞானிகள்.

மூன்றெழுத்து கூடிய (ஓம்) அந்தப்ரணவத்தை நம: பத நாராண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்தினால் மூன்று பதங்களால் ஆன எட்டெழுத்து மகா மந்திரம் கிடைக்கும்.
அம்மூன்று பதங்களிலும் ஆத்மாவினுடைய பிறருக்கு அடிமை இல்லை, அவனைத்தவிர வேறு அடைக்கலம் (சரண்) இல்லை, அவனைத்தவிர வேறு இன்பம், அனுபவம் இல்லை ஆகிய மூன்று ஆகாரங்களையும் தோற்றுவித்து, அவ்வாகாரங்களுக்கு எதிர்த்தட்டாகத் தான் சேஷித்தவம், (தலைமை) சரண்யத்வம் (அடைக்கலம் ஏற்றல்), ப்ராப்பயத்வம் (பெருதருதல்) என்கிற மூன்று ஆகாரங்களையுடையது எம்பெருமான் நிலை. இப்படி மூன்று பற்றிச் சூசகமாகச் சொல்லி, இதை மயர்வற மதிநலம் தந்து உணர்த்திய அந்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் கண்டமென்னுங் கடிநகராம் என்கிறார்.

அவனை உணர்ந்து அடைவதே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி முக்தி என்னும் மூன்றெழுத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர்களிடம் இரக்கமுடையவன் புருஷோத்தமன் என்கிறார்.வாமன அவதாரங்கொண்டு ஓரடியில் இவ்வுலகு நிமிர (அளந்து) ஓரடியில் விண்நிமிர, ஓரடியில் பாதாளம் நிமிர மூன்றடியாக நிமிர்த்தி, இந்த மூன்று உலகினும் தோன்றியவன்.பரம் வ்யூக, விபவம் என்னும் மூன்றினில், நின்று, அமர்ந்த, கிடந்த, என்று மூன்று உருவானவன் என்கிறார்.

அவன் இந்த அழகான பொழில் சூழ்ந்த கங்கைக் கரைமேல் அமைந்துள்ளகண்டமென்னும் கடிநகரில் எழுந்தருளியுள்ளான் என்று, பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், ரிஷிகேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45-வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்தில் இருந்து நேராக பத்திரிநாத் சென்றுவிட்டும், திரும்பும் வழியிலும் சேவித்துவிட்டு வரலாம். பத்திரியிலிருந்து சுமார் 60 மைல் தூரமாகும். இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர்.

ப்ர – சிறந்த யாகம், வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு ப்ரயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ரயாகை என்றாயிற்று. எத்தனை நுட்பமாக மூன்றெழுத்தை வைத்துப் பாடுகிறார் பாருங்கள். இன்னொரு பாடல் திருவேங்கடம் பற்றியது. பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்திருந்தாலும் சரணாகதியாக நிறைவுப் பதிகம் செய்தது திருமலையில். வேதப் பொருளே, வேங்கடவா! என்று வாயார அழைக்கிறார். பெரியாழ்வார், திருவேங்கடநாதனிடம் அளவுக்கு அதிக ஈடுபாடு உடையவர். அதனால்தான் தன்னுடைய திருமொழியை நிறைவு செய்கின்ற பொழுது,

சென்னியோங்கு தண்
திருவேங்கடமுடையாய்
உலகு தன்னைவாழ நின்ற நம்பீ!
தாமோதரா! சதிரா!
என்னையும் என் உடைமையையும்
உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே

என்று அவனிடம் சரண் புகுந்து தன் பிரபந்தத்தைத் தலை கட்டினார். அதே ஈடுபாட்டை ஆண்டாளிடமும் காணலாம்.

அதனால்தான் ஆண்டாள், “வேங்கடவற்கு என்னை விதி” என்று உறுதியாக இருந்தாள். பெரியாழ்வார் பல்வேறு பாசுரங்களிலே திருமலையப்பனை திரும்பத் திரும்ப நினைத்துப் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாசுரம்தான் கீழ் வரும் பாசுரம்.

போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய்
போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல கத்தார்
ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்
கோது கலமுடைக் குட்ட னேயா
குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா
வேதப் பொருளே என்வேங்கடவா
வித்தக னேஇங்கே போத ராயே.

இதில், திருமலை அப்பனை கண்ணனாக தன்னருகே அழைக்கின்றார். அப்பொழுது திருவேங்கடவன் பெருமையைக் குறிக்கும் வண்ணம் அடுக்கடுக்கான அடைமொழிகளை கொடுக்கிறார். கோதுகலமுடைய குட்டன், குன்றம் எடுத்தவன், குடமாடு கூத்தன், வேதப் பொருள், வேங்கடவன், வித்தகன் என விசேஷமான குணங்களை இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் சுட்டிக் காட்டுகின்றார்.

இதில் முதல் சொல் கோதுகலமுடையவன் என்பது. பெரியாழ்வார் பயன்படுத்திய இதே சொல்லை ஆண்டாளும் தன்னுடைய திருப்பாவையில் ‘‘கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்’’ என்று பயன்படுத்துவதை நாம் இங்கு சிந்திக்கலாம்.கோதுகலம் – ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம். இங்கு, ‘கோது கலமுடை’ என்பதற்கு (எல்லாருடைய) கௌதூஹலத்தை (த் தன்மேல்) உடைய என்று பொருளாய், எல்லாராலும் விரும்பத்தக்க (குணங்களையுடைய) வனே! என்று கருத்தாம். ஆம்; உண்மைதானே. திருமலையப்பனை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்? மண்ணிலே நம்மைப் போல சாதாரண சம்சாரிகளிலிருந்து விண்ணை ஆளும் தேவர்கள் வரை அவனை விரும்புகின்றார்கள்.

அவனை வந்து சேவிக்கிறார்கள். அப்படி சேவிப்பதால் மகிழ்கிறார்கள். குதூகலம் உடையவர்களாக மாறுகின்றார்கள். அடியவருக்கு அருள்புரியும் அந்த வேங்கடவன், ஆயிரக்கணக்கில் தன்னை வந்து சேவிக்கும் பக்தர்களைப் பார்த்துச் சந்தோஷப்படுகிறான்.சேதன லாபம் ஈஸ்வரனுக்கு அல்லவா. அப்படிப்பட்ட ஒரு சேதனன் தனக்குக் கிடைத்தால் அது அவனுக்கு எத்தனை மகிழ்ச்சி தரும்? அந்த மகிழ்ச்சியை அடையத்தான் திருமலையிலே வந்து எழுந்தருளி இருக்கின்றான். அடுத்த வார்த்தை, குன்றமெடுத்தவன் என்பது.

திருமலையப்பன் விஷயத்தில் இதே வார்த்தையை ‘‘குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்’’ என்ற பாசுரத்தில், நம்மாழ்வாரும் பயன்படுத்துகின்றனர். பசுக்களையும் பசுவுக்கு சமானமான சாதுக்களையும், தன்னுடைய வாக்கை நம்பி தன்னை முழுமையாக நம்பியவர்களையும் காப்பதற்காக, கிருஷ்ணாவதாரத்தில், ஒரு மலையை ஏழுநாள் சுண்டுவிரலால் தூக்கிக்கொண்டு நின்றான். அந்த ஏழு மலைகளும் இப்பொழுது எம்பெருமானை தாங்கிக் கொண்டு நிற்கின்றன. அவன் மலை மேல் நிற்கும் காட்சியைக் காணும் போதே அவன் மலையை தூக்கிய காட்சியும் நினைவுக்கு வந்து விடுகிறது அல்லவா. அடுத்த சொல், அற்புதமான சொல் குடமாடு கூத்தா – குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்று அழைக்கின்றார்.

இசையில் வல்லவன் கண்ணன், நாட்டியத்திலும் வல்லவன் என்பது அவன் குடக்கூத்து ஆடியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். திருநாங்கூர் திவ்ய தேசம் ஒன்றில், குடமாடு கூத்தன் என்கிற திருநாமத்தோடு அவன் சேவை சாதிக்கின்றான். சிறிய திருமடலில் திருமங்கை ஆழ்வார் குடமாடு கூத்தை மிக அற்புதமாக வர்ணிக்கிறார். பெரியாழ்வாரும் வேறொரு பாத்திரத்தில் குடமாடு கூத்தைப் பற்றித் தெரிவிக்கின்றார்.

குடங்க ளெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎம் கோவே
மடங்கொள் மதிமுகத் தாரை மால்செய்ய வல்லஎன் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிள வாகமுன் கீண்டாய்
குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.

குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து இது என்பார்கள். இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க, இருதோள்களிலும் இருகுடங் களிருக்க, இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலேதூக்கிப் போட்டு ஆடும் கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றென்றும் அறுவகைக் கூத்திலொ ன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குப வைந்துறுப்பாய்ந்து”

– என்று மேற்கோளும்காட்டினர் சிலப்பதி காரவுரையில் அடியார்க்கு நல்லார்.

அடுத்த சொல் வேதப் பொருள் – வேதங்களாற் புகழ்ந்து கூறப்படு பவனென்று கருத்து. சதுர் வேதங்களும் அவனைப் போற்றுகின்றன. வேதத்தின் சாரமான பொருள் திருவேங்கடவன். சகல வேதங்களும் அவனைப் போற்றுவதால்தான், வேத வல்லுநர்கள், வேதம் போற்றிய பொருளான, அவனை நாள்தோறும் துதிக்கின்றனர். “சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்” என்ற பாசுரத்தில் மலைகளின் உச்சியில் அவன் இருப்பதாகப் பெரியாழ்வார் பாடுகிறார். இங்கே மலை உச்சி என்பது வேதங்களின் உச்சியான பிரம்ம பாகம். அந்த பிரம்மத்தின் பொருளாக பிரம்மமாக விளங்கக்கூடியவன் திருமலையப்பன்.

எம்பெருமானாரும், ஸ்ரீபாஷ்யத்தில் தொடக்கத்தில் ‘‘பிரஹ்மணி ஸ்ரீனி வாஸே, பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூபா’’ என்று பரப்பிரம்ம சப்தத்தின் பொருளான ஸ்ரீவெங்கவனிடத்தில் தமக்கு பக்தியுண்டாக பிரார்திக்கிறார்.அடுத்து, வேங்கடவாணன் என்று அழைக்கின்றார். கடம் என்றால் வினைகளால் ஏற்படும் பாவங்கள். அந்த பாவங்களை எல்லாம் வெந்து போகச் செய்கின்ற தலம் திருவேங்கடம்.

அந்தத் திருவேங்கடத்தை தனக்கு இருப்பிடமாகக் கொண்டு வாழ்பவன். வாணன் என்றால் வாழ்பவன். திருவேங்கடவத்தில் வாழ்பவன் என்று பொருள். அடுத்து, வித்தகன் என்று அழைக்கின்றார். வித்தகன் என்றால் வல்லவன் என்று பொருள். அதிசயத் தன்மையை உடையவன் என்றும் பொருள் உண்டு. கலியுகத்தின் அதிசயமாய், கண்கண்ட தெய்வமாய் விளங்குகின்றவன் திருமலையப்பன்.

அங்கே சென்று அவனைக் கண்டு வியக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? வித்தகன் என்பதற்கு இடையன் என்றும் ஒரு பொருள் உண்டு. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைநின்றவன் திருமலையப்பன். இந்த வித்தகத்தை நம்மாழ்வாரும் “பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்” என்று, தம்முடைய திருவாய்மொழியில் பாடுகின்றார். இப்படிப் பலப்பல அடைமொழிகளால் பெரியாழ்வார் போற்றுகின்ற திருவேங்கடநாதனை நாம் மனதில் கொள்ளுவோம். இந்தப் பாசுரத்தை தினம் பாடி பெருமானின் பேரருளைப் பெறுவோம்.

தொகுப்பு: பாரதிநாதன்

The post பிள்ளைத் தமிழ் பாடிய பெரியாழ்வாரின் பக்தி appeared first on Dinakaran.

Tags : Pillaith ,Periyalvar ,Alvars ,
× RELATED மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்