×

பக்ரீத் பண்டிகையின் போது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தொழுகை நடத்த தடையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் தொழுகை நடத்த இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், மலைக்கு மேல் தானே தர்கா அமைந்துள்ளது; அரைமணி நேரம் தொழுகை நடத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கருத்து தெரிவித்ததோடு, தொழுகை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டனர். வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் பக்ரீத் பண்டிகையின் போது திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் தொழுகை நடத்த தடையில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The post பக்ரீத் பண்டிகையின் போது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தொழுகை நடத்த தடையில்லை: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : festival of Bakreet ,Tirupparankundam ,Ikord Branch ,Madurai ,Madurai Branch ,High Court ,Sikkandar Dargah ,Tirupparankuram ,festival of Bakreith ,iCort ,
× RELATED மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு,...