×
Saravana Stores

பருவமழை பொய்த்ததால் தாமிரபரணியில் நீர்வரத்து குறைவு: உறை கிணறுகளில் நீர் வரத்து இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை: தாமிரபரணியில் உள்ள உறை கிணறுகளில் நீர் வரத்து இல்லாததால் சுற்றுவட்டாரங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 90-க்கும் மேற்பட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தாமிரபரணி ஆற்றில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மழை பொலிவு அதிகம் உள்ள காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் உறை கிணறுகளில் இருந்து தங்கு தடையின்றி தென் மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். சமீப காலமாக பருவமழை பொய்த்து விட்டதால் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

ஜூன் மாதத்தில் இதுவரை வெறும் 1.60 மி.மீ மழை பொழிவு மட்டுமே பதிவாகியுள்ளதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்காக 350 முதல் 400 கனஅடி மட்டுமே தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பெரும்பாலான உறை கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாக சுமார் 70-க்கு மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெரும் குடிநீர் ஆதாரமாக திகழும் தாமிரபரணியில் உறை கிணறுகள் வறண்டு விட்டதால் அந்த அந்த பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களை கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதால் ஆறு மாசடைந்து வரும் நிலையில் உறை கிணறுகளை சுற்றிலும் மணல் இல்லாததால் இயற்கையான முறையில் நீர் சுத்திகரிக்கப்படுவது தடைப்பட்டு நச்சு தாவரங்களின் வேர்களின் மூலம் உறை கிணறுகளுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் காவலை தெரிவிக்கின்றனர்.

The post பருவமழை பொய்த்ததால் தாமிரபரணியில் நீர்வரத்து குறைவு: உறை கிணறுகளில் நீர் வரத்து இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,Nellai ,Thamirabarani ,Dinakaran ,
× RELATED தாமிரபரணியில் தண்ணீர் குறைந்தது குழித்துறை சப்பாத்து சாலை திறப்பு