×

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வருவதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறோம் என, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ெதரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் முகாம் அருப்புக்கோட்டையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் கணேசன் வரவேற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாமினை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தாண்டு கல்லூரியில் சேருபவர்கள், வரக்கூடிய கல்வியாண்டில் கல்லூரியில் சேருபவர்கள் இரண்டு பேருமே வந்துள்ளீர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நீங்கள் கல்வியறிவு கட்டாயம் பெறவேண்டும். எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் கூட அந்த சிரமங்களை எல்லாம் தாண்டி கல்வியறிவை பெறவேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினர். அதில் 7 ஆயிரத்து 226 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 300 பேர் தோல்வி அடைந்துள்ளனர். கல்லூரியில் சேர்ந்தவர்கள் 6 ஆயிரத்து 640 பேர். தேர்வு பெற்றவர்களில் 91.8 சதவீதம் பேர் சேர்ந்துள்ளனர். மீதி 587 பேர் கல்லூரியிலோ, பாலிடெக்னிக்கிலோ சேராமல் உள்ளனர். அவர்களை நமது முதலமைச்சர் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் படிக்க வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். முதலமைச்சரின் எண்ணம் மட்டும் அல்ல உங்கள் வீட்டு பெற்றோர்களின் எண்ணமும் அதுவாக தான் இருக்கும்.

நீங்கள் படிப்பது ஒன்று தான் உங்கள் சொத்தாக இருக்கும். எவ்வளவு நிலங்கள் இருந்தாலும் கூட அது நம்மை காப்பாற்றாது. படிப்பு ஒன்று தான் நம்மை காப்பாற்றும். படிப்பதற்கு வேண்டிய உதவிகளை தமிழ்நாடு அரசாங்கம் செய்யும். நானும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வேன். உங்களுடைய எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும். எதிர்காலம் நிச்சயமாக இருக்கும். தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகள் வர உள்ளது. சாத்தூர், அருப்புக்கோட்டையில் தொழிற்சாலைகள் வரவுள்ளது. இதற்கான பணிகளை நானும் அமைச்சர் தங்கம் தென்னரசும் செய்து கொண்டு இருக்கிறோம். மேலும் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வருவதற்கும் வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறோம். நீங்கள் படித்து வரக்கூடிய காலத்தில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி தருவோம். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தாசில்தார் அறிவழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், ராஜ்குமார், வேலுச்சாமி, தொழில்நுட்ப உதவியாளர்கள் பாலமுருகன், கீர்த்தனா, சாந்தி, புள்ளியியல் அலுவலர் கணேசன், கண்காணிப்பாளர் திருமேனி, நகர திமுக செயலாளர் ஏ.கே.மணி, ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் மணிமுருகன், ஜெயகவிதா, வளர்மதி, அகமது யாசீர், தமிழ்காந்தன், டூவிங்கிளின் ஞானபிரபா, காந்திமதி, நிர்மலா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட பிரதிநிதிகள் சிவசங்கரன், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் உயர்கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

 

The post படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chatur Ramachandran ,Chipkot Industrial Estate ,Aruppukkottai ,Sathur Ramachandran ,Chipcott industrial park ,Virudhunagar district ,
× RELATED தொழிற்சாலையில் பணிபுரிந்ததால்...