×

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஜூன் 26ம் சர்வதேச போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

*கொடைக்கானல் காவல் துறை, செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமை வகிக்க, செஞ்சிலுவை சங்க தலைவர் கேசிஏ குரியன் ஆபிரகாம், கொடைக்கானல் டிஎஸ்பி மதுமதி முன்னிலை வகித்தனர். பேரணியில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி, ஏரி சாலை பகுதியில் துவங்கி அண்ணா சாலை வழியாக சென்று மூஞ்சிக்கல்லில் நிறைவடைந்தது. இதில் செஞ்சிலுவை சங்க துணை தலைவர்கள் சாம் ஆபிரகாம், கருணாநிதி, சலாமத், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*குஜிலியம்பாறை காவல்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி துவக்கி வைத்து பேசினார். இதில் குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, கம்பன் வித்யாலாயா உயர்நிலைப்பள்ளி, டி.கூடலூர் விவேகம் வித்யாலயா உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கடைவீதி, காமராஜர் சிலை சாலை வழியே பஸ் ஸ்டாண்டு வரை சென்ற பேரணியில் போதை பொருளுக்கு எதிரான கோஷங்களை மாணவர்கள் எழுப்பியவாறு சென்றனர். இதில் இன்ஸ்பெக்டர் (பொ) வேலாயுதம், எஸ்ஐக்கள் சரத்குமார், பொன்ராஜ், திமுக பேரூர் செயலாளர் கதிரவன், வர்த்தக சங்க செயலாளர் பூவரசன், பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*வத்தலக்குண்டுவில் காவல் துறை, போதை சிகிச்சை மையம் சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமை வகிக்க, எஸ்ஐக்கள் ரமேஷ் ராஜா, வாணி, ராம் சேட், போதை சிகிச்சை மைய இயக்கனர்கள் மேரி குளோரி, ஜெயந்தி முன்னிலை வகித்தனர். பேரணியில் வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

*அம்மையநாயக்கனூரில் காவல் துறையினர், பள்ளி மாணவ, மாணவியினர் இணைந்து போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இன்ஸ்பெக்டர் குருவத்தாய் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் ராஜன் முன்னிலை வகிக்க, அறிவியல் ஆசிரியர் ராஜேந்திரன் வழிநடத்தினார். பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், போலீசார், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மதுவினால் ஏற்படும் பாதிப்புகள், சமூக சீர்கேடுகள் என போதைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எஸ்ஐ கருப்பையா நன்றி கூறினார்.

*ஒட்டன்சத்திரம் சக்தி கலை- அறிவியில் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி தாளாளர் வேம்பணன் தலைமை வகிக்க, முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தார். எஸ்ஐ சூரியகலா துவக்கி வைத்து, போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை குறித்து மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.தொடர்ந்து மாணவிகள், நகர முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவிகள் சென்றனர். முன்னதாக போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சித்ரா, நந்தினி செய்திருந்தனர்.

*ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்துவ கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சுந்தர்சிங் தலைமை வகித்தார். எஸ்ஐ பாலகுருசாமி கலந்து கொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்ப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து போதை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் நன்றி கூறினார்.

*பழநியில் ரயில்வே போலீஸ் சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரயில்வே இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி தலைமையில் எஸ்ஐ பொன்னுச்சாமி மற்றும் போலீசார் பழநி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் போதை பொருள் பயன்படுத்துதலால் அதிகரிக்கும் குற்றங்கள், கிடைக்கும் தண்டனைகள், உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Anti-Drug Day ,Dindigul district ,Kodaikanal ,International Day against Drug Abuse ,Kodaikanal Police Department ,Red Cross ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை